கீழ் அவ்வாறு அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் மதம் மாறிய சில பெண்களின் புகைப்படங்களைத்தந்துள்ளேன்.
இதே போல் கோடிக்கணக்கான ஏனைய முஸ்லீம் பெண்களும் தமது இஸ்லாம் மதத்தின் மீதான விசுவாசத்தின் நிமித்தம் பர்தா அணிகின்றனர். குரானிலும் ஹதீஸ் களிலும் பர்தா பற்றி பல இடங்களில் குறிப்பிப்பட்டுள்ளது. அதற்கமையவே முஸ்லிம் பெண்கள் பர்தா அணிகின்றனர்.
அவ்வாறாயின், பர்தாவுக்கு எதிரான விமர்சனம் குரானையும், முஹம்மது நபி (ஸல்) இனையும் அவமதிப்பதாகவே கொள்ளப்படல் வேண்டும்.
இதனை மறுவார்த்தைகளில் கூறுவதானால், இது இஸ்லாம் சமயத்தின்மீதான (இறை) நிந்தனையாகும்/அவமதிப்பாகும். இது தொடர்பாக சுய சிந்தனையும், அறிவும் உள்ள எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!
இவர்களது அறிவிற்கு படாத முக்கிய விடயம் என்னவெனில், மேற்கத்திய/சர்வதேச இனவாத/அரசியல்/பொருளாதார சக்திகட்காக இவர்கள் இலவசமாக விளம்பரம் செய்கின்றனர் என்பது தான்!.
இன்று உலகில் மிக விரைவாக வளர்ந்து வரும் சமயம் இஸ்லாம் என்பதை எந்த நேர்மையான மனிதனும் மறுக்கமாட்டான். உதாரணமாக, அமெரிக்காவில் மட்டும் வருடாந்தம் சுமார் 30,000 பேர் இஸ்லாம் மதத்தினை தழுவுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாவர்.
இங்கு மதம் மாறிய புதிய முஸ்லிம் பெண்கள் பொதுப்பட எல்லோருமே ஏதோ ஒருவகையான இஸ்லாத்தில் விதந்துரைக்கப்பட்ட பர்தாவினையே அணிகின்றனர். முஸ்லீம் அல்லாத ஏழைகள் பண அல்லது வேறு வசதிகள் வழங்கப்படுவதன் மூலம் மத மாற்றம் செய்யப்படுகின்றனர் என்ற பிரச்சாரத்தைப் பொய்ப்பிக்கக்கூடிய வகையில் இன்று இஸ்லாம் மதத்தைத் தழுவுபவர்களில் கணிசமானவர்கள் மேற்கத்தைய செல்வ நாடுகளில் உள்ள நன்கு உயர் கல்வித்தராதரம் உள்ள, அல்லது வேறு உயர் பதவிகளில் உள்ள வசதி படைத்தவர்களாவர்.
பல பிரபல்யமான விஞ்சானிகளும், அரசியல் வாதிகளும்கூட இதனுள் அடங்குகின்றனர். பல பிரபலமான இந்திய நடிகைகள் இஸ்லாம் மதத்தைத் தழுவியமை இங்கு குறிப்பிட வேண்டிதொன்றாகும். இந்த நடிகைகள் இன்று பர்தா அணிந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களைப் பர்தா அணியும்படி யார் வலியுறுத்தினார்கள்? பெண்ணியல்வாதிகள் இதற்குப் பதிலளிக்க வேண்டும்!. இவர்களது கண்களுக்கு அல்லது காதுகளுக்கு இவை எட்டவில்லையா? பர்தா அணிபவர்களில் மிகப்பெரும்பான்மையினர் தமது சுய விருப்பத்தின் அடிப்படையில் தான் பர்தா அணிகின்றனர்.
உண்மை என்ன வென்றால், இந்தப் பெண்ணியல் வாதிகற்கு பர்தாவினை விமர்சனம் செய்வது ஒரு பொழுது போக்காகவும், fashion ஆகவும் காணப்படுகின்றது!. இதனை அவர்கள் அதன் விளைவின் ஆழ அகலம் தெரியாமல் செய்து வருகின்றனர்!!.
உலகில் இன்று மிக வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாம் அமெரிக்காவிற்கும், ஏனைய மேற்கத்தைய நாடுகட்கும், இந்திய, சீனா போன்ற பாரிய பிரதேச வல்லரசுகற்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.
பர்தா எதிர்ப்புக்குப் பின்னால் உள்ள அரசியலையும், ஏனைய காரணிகளையும் பெண்ணியல்வாதிகள் தெளிவாக விளங்கிக்கொள்வது அவசியமாகும். இந்த நாடுகள் இன்று கோடிக்கணக்கில் செலவு செய்து முஸ்லிம்கற்கும், முஸ்லீம் நாடுகற்கும் எதிரான பிரச்சாரத்தில் ‘சங்கம்’ அமைத்து மிகத்தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன என்பதை அறிவுள்ள எவருக்கும் சொல்லித்தான் தெரிய வைக்க வேண்டும் என்பதல்ல!.
இதன் ஒரு வகையான பிரச்சாரம்தான் பர்தாவுக்கு எதிரான பிரச்சாரமுமாகும். இந்த அரசுகளினாலும் அவை சார்ந்த நிறுவனங்களினாலும் நிதி வாரி வழங்கப்படுகின்ற மிகவும் சக்தி வாய்ந்த சர்வதேச ஊடகங்களும், பிராந்திய ஊடகங்களும் நிறுவனங்களும் மிகத் திறமையான முறையில் திட்டமிட்டு இதனைச் செய்து வருகின்றன என்பதை ஏன் இந்தப் பெண்ணியவாதிகள்/பெண்ணுரிமை வாதிகள் அறியாமல் இருக்கின்றனர்? அல்லது அறிந்தும் மறை முகமாக அவற்றிற்கு ஆதரவு வழங்குகின்றனரா என்று வினவத்தோன்றுகின்றது!
பர்தா ஹிந்து, கிறிஸ்தவ பெண்களின் அடிப்படை உரிமையும் ஆகும்!
எந்த ஆடையினை ஒருவர் தெரிவு செய்ய வேண்டும் என்பது அவரது அடிப்படை உரிமையாகும். போதிய உடையினை அணிதல் அல்லது உடையணிவதற்கான உரிமை பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான ஆவணங்களில் தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பர்தாவினை தவறாக விமர்சிப்பது அதனை அணிந்திருப்பவரின் அடிப்படை உரிமைக்கு எதிரானதாகக் கொள்ளப்படலாம்!
இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஏனைய சமயங்களைப்பின்பற்றும் பெண்கள் பர்தாவுக்கு மிகவும் ஒப்பான உடைகளை அணியும்போது மேற்கத்திய ஊடகங்களோ, பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களோ அல்லது பெண்ணியவாதிகள் (feminists) என்று முத்திரை குத்திக்கொள்பவர்களோ வாய் திறப்பதில்லை.
பர்தா இஸ்லாமியப்பெண்கள் மட்டும் அணியும் உடை அல்ல! அது ஏனைய மதங்களைச்சேர்ந்த கணிசமான பெண்கள் அணியும் உடையாகவும் உலகளாவிய ரீதியில் காணப்படுகின்றது.
ஆனால், முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும்போது மட்டுமே இவர்கள் தொண்டை கிழியக்கத்துகின்றனர்! கூக்குரல் இடுகின்றனர்!!. இதன் பின்னணியினை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறான பின்னணிகளை நான் பின்னொரு இடத்தில் தெளிவாக விவரிக்கவுள்ளேன்.
அண்மைய The Times of India (22/02/2023) தகவலின்படி, இந்தியாவில் 59% வீதமான ஹிந்து பெண்களும் (தென்னிந்தியாவில் குறைவாக இருந்தாலும் கூட), 89% வீதமான முஸ்லீம் பெண்களும், 21% வீதமான கிறிஸ்தவ பெண்களும் தாம் வெளியே செல்லும்போது ஏதோ ஒரு வகையான தலைக்கவசத்தை அணிகின்றனர்.
இதனை முஸ்லிம்கள் ஹிஜாப் என அழைக்கின்றனர். ஹிஜாப் என்பதற்கு வேறு விசேட அர்த்தம் இருப்பினும், நடைமுறையில், தலைக்கவசத்துடனான பெரும்பாலான முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாவை ஹிஜாப் என்றே அழைக்கின்றனர்.
அதுபற்றி மேலும் பின்னொரு இடத்தில் விளக்கப்படும். கீழே தரப்பட்டுள்ள புகைப்படங்களில் அவ்வாறு மேற்குறிப்பிட்ட முஸ்லிம்கள் அல்லாத ஹிந்து, கிறிஸ்தவ, சீக்கிய பெண்கள் பர்தாவுக்கு ஒப்பான பல்வேறுவகை உடைகளை அணிந்திருப்பதைக்காணலாம்.
பர்தா – மிகத்தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட சொல்!
இந்த 21ம் நூற்றாண்டில் மிகத்தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட சொற்களில் ஒன்றும், மிகத்தவறாக விமர்சிக்கப்படுகின்ற சொல்லும் இதுவாகும் என்று கூறினால் அது மிகையாகாது. இது முஸ்லீம் பெண்களும் கிறிஸ்தவப்பெண்களும், யூதப்பெண்களும் அணியும் கறுப்பு நிறத்திலான தலையிலிருந்து பாதங்கள்வரை மறைத்து அணிகின்ற உடையினை மட்டும்தான் குறிக்கின்றதா? இதுபற்றி வேறுபட்ட பர்தாக்களின் வகைகள்பற்றி எழுதும்போது விளக்கலாம் என்று நினைக்கின்றேன்.
பர்தா என்ற சொல் அரபுச்சொல் அல்ல. சிலர் இது வஹாபிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது என்று தவறாக விளங்கிக்கொண்டுள்ளனர். எதற்கெடுத்தாலும் வஹாபிகளை குறைகூறுவது இவர்கற்கு வழக்காய்ப்
போய் விட்டது. இது இன்னொரு வகையான அறியாமை.
வஹாபிக்கொள்கைகள் இஸ்லாமிய அறிஞர் முஹம்மது இப்னு அப்துல் வஹாபினால் 18ம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பர்தா அதற்கு முன் ஆயிரக்கணக்கான வருடங்கள் இருந்தே பெண்களால் அணியப்பட்டு வருகின்ற பண்பான உடையாகும்.
இது பர்தாவுக்கு எதிரான போராளிகள் மிகவும் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விடயமாகும்!
purdah என்ற சொல் ஹிந்தி உருது சொல்லான pardā என்பதிலிருந்து பெறப்படுகின்றது. இந்த ஹிந்தி உருது சொல் பாரசீக சொல் pardeh விலிருந்து பெறப்படுகின்றது. இந்த மொழி புரோட்டோ-இந்தோ- ஐரோப்பிய (Proto-Indo-European) மொழிக்குடும்பத்தில் ஒரு அங்கமாகும்.
இதற்குப் பல விளக்கங்களைப் பலரும் பலவிதமாகக் கொடுத்துக்கொண்டு வருகின்றனர். சுருக்கமாக ‘திரை’ (screen அல்லது veil) என்பதே அதன் நேரடி மொழி பெயர்ப்பு. அதாவது அந்நிய ஆடவனுக்கும் அதனை அணியும் பெண்ணுக்கும் இடையிலான திரை என்று கொள்ளலாம்.
பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் (Islamic Scholars) கருத்துப்படி, முகத்தையும் மணிக்கட்டுக்கு கீழ் உள்ள கைகளையும் தவிர்ந்த உடலின் ஏனைய பகுதி முழுவதையும் பூரணமாக மறைக்கும் எந்த ஆடையும் பர்தா என்ற வரையறைக்குள் அடங்கும்.
ஒரு சாதாரண மனிதனின் (layman) வார்த்தைகளில் சொல்வதானால், மிகக்குளிர் குளிர்காலத்தில் நாம் மேற்கத்தைய நாடுகளில் அணியும் எந்த ஆடையினையும் பர்தா என்ற வரைவிலக்கணத்திற்குள் அடக்கலாம். இந்த உதாரணத்தினை முஸ்லீம் அல்லாத நண்பர்கற்கு மேலும் விளக்குவதற்காகப் பயன்படுத்தியுள்ளேன் என்பதை மட்டும் கவனத்தில் கொள்க.
ஆனால் ஆடை இறுக்கமாக, உடலின் கட்டமைப்பை (form) தெளிவாக வெளிக்காட்டுவதாக இருக்கக் கூடாது. உதாரணமாக, இறுக்கமான டெனிம் (Denim) காற்சட்டைகள், shirt அணிந்து, தலைக்கவசம் அணிந்தால் அது பர்தா என்ற வரைவிலக்கணத்திற்குள் அடங்காது.
கீழே தரப்பட்டுள்ள புகைப்படங்களில் கிறிஸ்தவப்பெண்மணிகள் அணிந்துள்ள இரு வகையான பர்தாக்கள் தரப்பட்டுள்ளன. இவர்கள் முகத்தையும் மணிக்கட்டுக்கு கீழ் உள்ள கைகளையும் தவிர உடம்பின் ஏனைய எல்லாப்பாகங்களையும் மறைத்திருப்பத்தைக்காணலாம்.
அவைதான் பெரும்பாலனான இஸ்லாமிய அறிஞர்களினால் குரான், ஹதீஸ் என்பனவற்றின் அடிப்படையில் விதந்துரைக்கப்பட்ட பர்தாவுக்கு ஒப்பானவையாகும். ஆனால், ஒரு சில பெண்கள் முகத்தையும் சேர்த்து மறைத்தால் அது அவர்கள் சுதந்திரமும், உரிமையுமாகும்.
உதாரணமாக கீழே உள்ள படங்களில் ஹிந்து பெண்கள் முகத்தை முழுவதும், கண்கள் மட்டும் தெரியக்கூடியதாக அணிந்திருப்பதைக்காணலாம். இது முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் (Niqab) எனும் பர்தாவுக்கு ஈடானதாகும். இதே போல் ஹிந்து பெண் முகத்தை முழுவதும் தனது சாறி முந்தானையால் மறைத்து இருப்பதையும் இன்னொரு படத்தில் காணலாம். இது முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா (Burka/Burqa) விற்கு ஒப்பானது எனலாம்.
அவற்றை விமர்சிப்பதற்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அவ்வாறு விமர்சித்தால் அவர்களது பெண்ணுரிமைக்கு எதிரானதாகவே அதனைக்கொள்ள வேண்டும்!. சூழ் நிலைக்கு ஏற்றவாறு முகத்தை மறைத்து பர்தா அணிவதனால் நன்மை இருக்குமானால் முகத்தை மறைப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்பதும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கின்றது. அதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையும் கிடையாது.
இந்தப் பெண்ணியல்வாதிகட்கும் அவர்கட்கு வக்காளத்து வாங்குபவர்கட்கும் ஆசிய ஆபிரிக்க, மேற்கத்தைய நாடுகளில் தினமும் பாலியல் ரீதியான துன்பூறுத்தலுக்குட்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான பெண்களின் அவல நிலை ஏன் தெரியாமல் போனது? அரை குறை ஆடை காரணமாக இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் தினமும் பாலியல் துன்புறுத்தலுக்கும் கற்பழிப்பிற்கும் ஆளாகும் பெண்களின் நிலை இவர்கட்கு ஏன் தெரியாமல் போனது?
இந்தப் பெண்ணியல்வாதிகள் தான் ஆண்களின் பாலியல் துன்புறுத்தலுக்கெதிராகவும் போர்க்கொடி பிடிப்பவர்கள். கூழுக்கும் ஆசைப்பட்டு மீசைக்கும் ஆசைப்படலாமா ? மீசையினை நீக்க வேண்டும் அல்லது கூழை தவிர்க்க வேண்டும். இவர்கள் வாதம் என்னவென்றால் நிறைவான உடையணிந்தால் அடிப்படை வாதம், அரை குறை அணிந்தால் அது நாகரிகம்! சுதந்திரம்!! உரிமை!!!
அவர்கட்கு அது மகிழ்ச்சி. பெண்களை அரை நிர்வாணமாகப் பார்க்க ஆசைப்படும் உளவியல் கோளாறு உள்ளவர்களை நாம் என்ன வென்று அழைப்பது?
முகத்தை மறைப்பதில் உள்ள ஒரேயொரு சமூக ரீதியான பாதகம் என்னவென்றால், criminals அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவதுதான். இருந்தாலும் இவை அண்மைக்காலங்களில் மிகவும் அரிய சம்பவங்களாகவே காணப்படுகின்றன.
இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் என்ன வென்றால், முகத்தை மறைத்து பர்தா அணியும் முஸ்லீம் பெண்களின் எண்ணிக்கை மிக மிக குறைவானதே என்பதாகும். உதாரணமாக, ஐக்கிய ராஜ்ஜியத்தில் (UK ), கிட்டத்தட்ட 7,000 முஸ்லீம் பெண்கள் மட்டுமே niqab அணிபவர்களாக காணப்படுகின்றனர்.
இந்த நாட்டின் மொத்த முஸ்லீம் பெண்கள் சனத்தொகை கிட்டத்தட்ட 18 இலட்சமாகும். அதாவது niqab (முகத்தை மூடிய பர்தா) இனை அணியும் பெண்களின் விகிதராம், மொத்த முஸ்லீம் பெண்களின் சனத்தொகையின் மீது, புள்ளி விபர ரீதியாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாத மிகச்சிறிய தாகும் (statistically insignificant). அதற்கு அண்டை நாடான பிரான்ஸினை எடுத்துக்கொண்டால் இது இன்னும் குறைவானதாகும்.
முஸ்லிம்களின் சனத்தொகை பிரான்சில் ஐக்கிய ராச்சியத்தைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிமாகக்காணப்பட்டாலும் அங்கு முகத்திரையுடனான பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். அங்கு கிட்டத்தட்ட அறுபது இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் பெண்கள். இவர்களில் சுமார் இரண்டாயிரம் முஸ்லீம் பெண்கள் மட்டுமே முகத்தை மூடக்கூடிய பர்தாவினை அணிகின்றனர். இது ஐக்கிய ராச்சியத்தில் முகத்திரை அணிபவர்களின் எண்ணைக்கையோடு ஒப்பிடும்போது கிட்டத்தட்ட கால்வாசியாகும்.
பெண்ணியல்வாதிகளில்/பெண்ணுரிமைவாதிகளில் எத்தனை பேருக்கு இது தெரியும்? முதன் முதலில் பர்தா தடை விதித்த நாடுகளில் ஒன்று பிரான்ஸ் என்பதும், இதன் அரசியல் பின்னணியும் இங்கு நோக்கப்பட வேண்டியதாகும். இது பற்றி பின்னர் எழுத எண்ணியுள்ளேன்.
பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் என்று (சிலரால்) வரையறுக்கப்படுகின்ற தலைக்கவசத்துடனான உடையினையே பிரான்சிஸ் அணிகின்றனர். ஆனல் இவர்களில் மிகப்பெரும்பான்மையினர் கழுத்தையும் கைகளையும் மறைக்கத்தவறுவதில்லை.
புள்ளி விபர ஆய்வின்படி, பர்தா அணிய விரும்பாத முஸ்லீம் பெண்களின் எண்ணிக்கை மிகச்சிறியதாகவே காணப்படுகின்றது.
இச்சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கும் பெண்ணுரிமைவாதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் விடுகின்ற விடயம் என்னவென்றால், இவர்களது பர்தாவுக்கு எதிரான விமர்சனம் கோடிக்கணக்கான தமது சுய விருப்பத்தின் படி எந்த வற்புறுத்தலும் இல்லாமல் பர்தா அணியும் பெண்களின் அடிப்படை உரிமைக்கெதிரானது என்பது மட்டுமல்ல அவர்களது மனதை புண்படுத்த்துகின்றது என்பதுமாகும்.
ஆடை என்பது மனிதனின் நாகரிக வளர்ச்சியோடு வளர்ந்த ஒன்று. உடையின்றி தெரிந்த மனிதன் இலை குழைகளை தனது உடையாக ஆரம்பத்தில் பயன்படுத்தினான். நாகரீகம் வளர வளர அவனது உடையும் கண்ணியமான உடையாக படிப்படியாக வளரத்தொடங்கியது.
இன்று நாகரிகம் என்ற போர்வையில் பல்வேறு வகையான நாகரீகமற்ற முறையில், பண்பற்ற முறையில் பல பெண்கள் உடையணிந்திருப்பதைக்காண்கிறோம். மானத்தை
மறைப்பது உடையின் தொழில் பாடு. கவர்ச்சியினை காட்டுவதல்ல! இந்த பெண்ணியல்வாதிகளில்/பெண்ணுரிமை வாதிகளில் கணிசமானவர்கள் நாகரிகமற்ற அல்லது அரைகுறை அல்லது இளைஞர்களின் பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடியதான அருவருப்பான உடைகளை அணிந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
இவர்கள் மற்றவர்கள் அணியும் உடைகளைப்பற்றி கவலைப்படுவதற்கு முன் தாம் கண்ணியமான உடையினை அணிந்து பெண் சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்!.
தொடரும்