மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இந்திய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அருள் ஜயரத்னம் என்றழைக்கப்படும் ராஜன் என்ற 41 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் உள்நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதுடன், நேற்றைய தினமே சந்தேகநபர் ராமேஸ்வரம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபரிடம் இருந்து சிறு குழுந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் அமெரிக்க டொலர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் 1996 தொடக்கம் 1998ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகள் அமைப்பின் தொழில்நுட்ப பிரிவில் கடமையாற்றியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ள சந்தேகநபர், இந்தியாவின் முத்துப்பேட்டையில் வசிக்கும் அவரது சகோதரியுடன் வசிப்பதற்காக அங்கு சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.
முல்லைத்தீவை பூர்வீகமாக கொண்ட குறித்த நபர் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை இலங்கையில் விட்டுவிட்டு இந்தியாவிற்கு சென்று குடியேறியுள்ளதுடன், வெகு விரைவில் அவர்களையும் இந்தியாவிற்கு வரவழைப்பதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.