பலுசிஸ்தானில் ஜனவரி 25ஆம் திகதியன்று, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஒரு வாரத்துக்குப் பின்னர், பெப்ரவரி 2ஆம் திகதியன்று, அதே மாகாணத்தின் நோஷ்கி மற்றும் பஞ்ச்கூர் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அதிகாரியொருவர் உட்பட ஏழு இராணுவ வீரர்களின் மரணமடைந்தனர்.
நோஷ்கி தாக்குதல் சில மணி நேரங்களிலேயே முறியடிக்கப்பட்டாலும், பஞ்ச்கூரில் 60 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மோதல் நீடித்தது.
இந்த தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தி பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆப்கான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமையை சமீபத்திய தாக்குதல்கள் காட்டுகின்றன.
ஜனவரி மாதத்தில் மட்டும், இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை பயங்கரவாதிகள் குறிவைத்தமை பாகிஸ்தானை உலுக்கியிருந்தது.
மற்றொரு பயங்கரவாத தாக்குதலில், பெஷாவரில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், கிறிஸ்தவ பாதிரியாரை சுட்டுக்கொன்றதுடன், அவரது நண்பரைக் காயப்படுத்தியிருந்தனர்.
இதேவேளை, தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானை சமாளிக்க ஆப்கானிஸ்தான் தலிபான்களை பாகிஸ்தான் ஈடுபடுத்த வேண்டும் என்று இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் முஹம்மது வாலி வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு 2015 ஜனவரியில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட 20 அம்சத் திட்டத்துக்கு செவிசாய்த்து தேசிய செயற்றிட்டத்தை இறுதி செய்யுமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
ஏழு வருடங்களுக்குப் பின்னரும், அதன் பல முக்கிய விடயங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், பயங்கரவாதம் மீண்டும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.