பாண்டிபஜாரில் உள்ள கார்ப்பரேஷன் வணிக வளாகத்தின் தரைத் தளத்தில் Boo Books என்றொரு புத்தகக் கடை உள்ளது (கடை எண் 74, B ப்ளாக்). நேற்று முதல் முறையாக இந்தக் கடைக்குச் சென்றேன். நாலடிக்கு ஆறடி பெட்டிக்கடைதான். (வத்திப்பெட்டிக் கடையென்றும் சொல்லலாம்.) ஆனால் அந்தச் சிறு இடத்துக்குள் ஆயிரக்கணக்கான புத்தகங்களை மிகத் திறமையாக அடுக்கியிருக்கிறார் மாற்றுத் திறனாளியான கடைக்கார இளைஞர் தமீமுன் அன்சாரி.
எனக்குப் புத்தகங்களைக் காட்டிலும் இந்த இளைஞரை மிகவும் பிடித்தது. என்ன சப்ஜெக்டை நாம் எடுத்துப் புரட்டினாலும் அதற்குத் தொடர்புள்ள நாலைந்து புத்தகங்களை உடனே எடுத்துக் காட்டக்கூடியவராக இருக்கிறார். ஐஎஸ் தொடர்பாக நானொரு புத்தகத்தை எடுத்துப் புரட்டியபோது உடனே சிரிய வரலாறு, உள்நாட்டு யுத்தம் குறித்து வேண்டுமானால் ஓரிரு தினங்களில் வரவழைத்துத் தரமுடியும் என்றார். LCHF சம்மந்தமாக என்னவாவது உள்ளதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன வேண்டும் என்று கேட்டவருக்கு ஜி.எம் டயட் பற்றித் தெரிந்திருந்தது. புத்தகம் இல்லை; ஆனால் தேடிப் பார்க்கிறேன் என்றார். அரசியல், வரலாறு, சமையல், கதைகள் (பல்ப்பும் உண்டு, தீவிர இலக்கியமும் உண்டு. முரகாமியின் முழுத்தொகுப்பு வைத்திருக்கிறார்) உடல்நலம், ஆன்மிகம் என்று எந்தத் துறையிலும் இவரிடம் குறைந்தது நூறு புத்தகங்கள் இருக்கின்றன.
அனைத்தும் ஆங்கில நூல்கள்தாம். ஆனால் தமீம் தமிழில் வாசிப்பவரே. கிளம்பும்போதுதான் அவருக்கு என்னை அடையாளம் தெரிந்தது. ரொம்ப சந்தோஷப்பட்டு செல்ஃபியெல்லாம் எடுத்துக்கொண்டார். டாலர் தேசம் படித்திருக்கிறார். என் மகள் மூவாயிரம் ரூபாய்க்குப் புத்தகம் வாங்கியதில் அவருக்கு மிகுந்த சந்தோஷம். சார் நீங்க ஒண்ணும் வாங்கலியே என்றார். கிண்டில் என்று பதில் சொன்னேன்.
பிரச்னையே அதான் சார். கிண்டில் வசதிதான். ஆனா எங்க தொழில் முடங்க ஆரம்பிச்சிடுச்சி. உங்கள மாதிரி படிக்கற ஆளுங்க நிறையப்பேர் இப்ப அதுக்கு மாறிட்டாங்க என்றார்.
சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் தமீமுன் அன்சாரியின் முழுக்கடையையும் என் கிண்டிலுக்குள் அடக்க முடிவதையும் எண்ணிப் பார்த்தேன். பதில் சொல்ல முடியாத மௌனத் தணல்வெளி.
இன்னும் சில வருடங்களுக்கு அவருக்கு என் மகள் ரெகுலர் கஸ்டமராக இருப்பாள் என்று நினைத்து சமாதானப்படுத்திக்கொண்டு திரும்பினேன்.
(Pa Rahavan)