இலங்கையின் அடுத்த பிரதமராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்று முன்னர் பதவியேற்றார். அவருக்கான பதவியேற்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மேற்கொண்டார். இலங்கையின் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான முடிவை, ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எடுத்து, அது தொடர்பான அறிவிப்பை, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கியுள்ளது என்ற தகவலை, அமைச்சர் மஹிந்த அமரவீர வெளிப்படுத்திய பின்னர், இப்பதவியேற்புத் தொடர்பான தகவலும் வெளியானது. எனினும், இப்பதவியேற்பு, சட்டத்துக்கும் அரசமைப்புக்கும் உட்பட்டதா என்பது தொடர்பில், தொடர்ந்தும் சந்தேகங்கள் நிலவுகின்றன.
இலங்கையின் பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல் பிரச்சினைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசமைப்புத் தொடர்பான சிக்கல்கள் எழவுள்ள நிலையில், டுவிட்டர் இணையத்தளத்திலும், இது தொடர்பில் குழப்பம் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ இருவரும், தங்களது டுவிட்டர் கணக்கில், தாங்களே பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கலைக்கப்பட்ட வட மாகாண சபையிலும் இரு கல்வி அமைச்சர்கள் அல்லது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணாக மகாண சபையில் ஐந்திற்கு பதில் ஆறு அமைச்சர்கள் இருந்ததுதம் இதனை முடிவு செய்ய முடியாமல் முன்னாள் முதல் அமைச்சர் விக்கி திணறியதும் இங்கு கவனத்தில் எடுகப்பட வேண்டியதாகும். அதுசரி தற்போது ரணில் சம்மந்தன் என்று இரு எதிர் கட்சித் தலைவர் என்ற பிரச்சனையும் தோன்றலாம் என்றும் ஆய்வாளர்கள் நகைச்சுவையாக பேசிக் கொள்கின்றனர்