எனது அரசாங்கத்தின் வெளிப்படுத்தப்படாத கடன்களும் கடன் பொறுப்புகளும் இப்போது மட்டுமே வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவிக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை அறிக்கையொன்றை ராஜபக்ஷ விடுத்திருக்கிறார். அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
வங்கிகளுடன் அவை நடவடிக்கைகளில் தாமாகவே செயற்படுகின்றன. அரச நிறுவனங்களினால் கடன் பெற்றுக் கொள்ளப்படுகின்றமை பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட சட்டங்களின் மூலமே நிருவகிக்கப்படுகிறது.
அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்க வேண்டியுள்ளது. அவற்றின் சொந்த வருவாய்களில் இருந்து அத்தகைய கடன்கள் திரும்ப செலுத்தப்படுகின்றன. சில கடன்களுக்கு திறைசேரி உத்தரவாதம் அளிக்கக் கூடும். அத்தகைய சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்திற்கு தெரிவிக்கப்படும் என்று மகிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது ;
வற் மற்றும் வருமான வரிகள் அதிகரிப்பை அறிவிக்கும் போதும் மூலதன ஆதன வரியை மீள அறிமுகப்படுத்தும் போதும் பிரதமர் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் விசேட அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.
எனது அரசாங்கம் கடன்பொறிக்குள் நாட்டை சிக்கவைத்திருப்பதால் இந்த மாதிரியாக வரிகளை அதிகரிக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். நாடு முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை இப்போது எதிர்நோக்கி வருகிறது.
இந்நிலையில் இத்தகைய நிலைக்கு என்ன காரணம் என்பதனை நாங்கள் பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போதைய அரசாங்கம் 2015 மார்ச்சில் இந்தியாவிடமிருந்து நாணயப் பண்டமாற்றாக 400 மில்லியன் டொலரை பெற்றிருந்தது.
மற்றொரு 650 மில்லியன் டொலரை 2015 மே யில் இறைமை பிணை முறி விநியோகத்தின் ஊடாக பெற்றுக்கொண்டனர். ஜூலையில் நாணயப் பண்டமாற்று ஏற்பாட்டின் பிரகாரம் மற்றொரு 1100 மில்லியன் டொலர் இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.
அக்டோபரில் மேலும் 1500 மில்லியன் டொலர் இறைமை பிணை முறி விநியோகத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டது. 2015 மார்ச்சிற்கும் 2016 மார்ச்சிற்கும் இடையில் அரசாங்கம் குறுகிய, இடைத்தர கால அடிப்படையில் இலங்கை அபிவிருத்தி பிணை முறிகளை விநியோகித்தது. 12 வேறுபட்ட சந்தர்ப்பங்களில் 2211 மில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட தொகையை கடனாகப் பெற்றிருக்கிறது.
15 மாத கால அதிகாரத்தில் தற்போதைய அரசாங்கம் 6361 மில்லியன் டொலரை வெளிநாட்டு கடன்களாக பெற்றிருக்கிறது. மத்தள விமான நிலையத்திற்கு ( 190 மில்லியன் டொலர்) , அம்பாந்தோட்டை துறைமுகம் (423 மில்லியன் டொலர்), நுரைச்சோலை அனல்மின் உலை ( 1340 மில்லியன் டொலர்), கொழும்பு மாத்தளை நெடுஞ்சாலை (631 மில்லியன் டொலர்), கொழும்பு கட்டுநாயக்க ( 248 மில்லியன் டொலர் ) ஆகிய யாவற்றையும் சேர்த்தால் முழு வெளிநாட்டுக் கடன்களின் தொகையும் இதே அளவைக் கொண்டதாகும்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொண்ட அரசகடன்களில் இருந்து பார்த்தால் எதனையும் நிர்மாணிப்பதற்குரிய போதிய பணம் இருக்கவில்லை. இரு துறைமுக நகரங்கள் ( 1400 மில்லியன் டொலர் ஒவ்வொன்றும் ) மற்றும் 500 மெகா வாட் சம்பூர் அனல்மின்உலை 500 மில்லியன் டொலர் மற்றொரு மத்தள விமான நிலையம் என்பனவற்றை மேற்கொள்ளவேண்டிய தொகை இறுதியில் இல்லாமல் போயுள்ளது.
எரிபொருள் விலைகளின் வீழ்ச்சியால் 2015 இல் 2500 மில்லியன் டொலரை அந்நிய செலாவணி சேமிப்பாக அரசாங்கம் பெற்றிருந்தது. ஆனால் அவர்களால் அந்நிய செலாவணி கையிருப்பை கட்டியெழுப்ப முடியவில்லை.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையை கூட இலாபமானவையாக அவர்களால் உருவாக்க முடியவில்லை. இந்த பெருந்தொகை கடன்களில் பெற்றோலிய இறக்குமதிகளிலிருந்து பெற்றுக் கொண்ட பாரிய தொகை சேமிப்பும் உள்ளடங்கும். ஆனால் அவை யாவும் நுகர்வுக்காக செலவிடப்பட்டுள்ளன.
ஏனென்றால் இது அநேகமாக அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படும் கோமாளித்தனமான நிதி பொறுப்பற்ற தன்மையாகும். இலங்கையின் கடன் தரவுநிலை பிச் மற்றும் ஸ்டாண்டட் அன் புவர்ஸினால் அண்மையில் தாழ்ந்த நிலைக்கு காண்பிக்கப்பட்டிருந்தது. இந்த தாழ்ந்த நிலைக்கு வந்துள்ளமை இலங்கைக்கு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
நிதிச் சந்தையில் கடனை பெற்றுக் கொள்வதற்கு கடினமான நிலைமை உருவாகியுள்ளது. இதனால் சர்வதேச நாணய நிதியம் போன்ற பல்தேசிய கடன் வழங்கும் அமைப்புகளில் அரசாங்கம் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த அமைப்புகள் நிபந்தனைகளை விதிக்கின்றன.
இதனாலேயே வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் இந்தியாவிற்கு 1100 மில்லியன் டொலரை திரும்ப செலுத்த வேண்டியிருந்தது. இந்த மாதம் அரசாங்கம் இலங்கை அபிவிருத்தி பிணைகளை பணத்துக்காக விநியோகித்திருக்கிறது. மூன்று மற்றும் ஐந்து மாத முதிர்வு காலத்தைக் கொண்டதாக பணத்தை திரட்டுவதற்காக இந்த பிணை முறிகளை விநியோகித்திருக்கிறது.
அபிவிருத்தி பிணை முறிகள் நீண்ட காலத்தை சேமிப்பவையாக கொண்டவை. ஆனால் குறுகிய காலத்தில் நிதியை திரட்டுவதற்காக இந்த அரசாங்கம் அவற்றை பயன்படுத்துகிறது.
2001 2004 இற்கு இடையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது நிகரதேசிய உற்பத்தி விகிதத்தில் அரசாங்கம் 102 வீதத்திற்கும் மேற்பட்ட தொகையை கடனாகப் பெற்றிருந்தது. 2014 இறுதியில் எனது அரசாங்கம் இதனை தாழ்ந்த மட்டத்திற்கு கொண்டுவந்திருந்தது.
1979 இற்கு பின்னர் 2014 இலேயே நிகர தேசிய உற்பத்தியில் தாழ்ந்த மட்டத்தில் கடன் தொகை இருந்தது. 2006 தொடக்கம் 2009 வரையிலான யுத்த காலத்தில் அரசாங்கத்தின் செலவினம் நிகர தேசிய உற்பத்தியில் 23 சதவீதமாகவே இருந்தது. ஆனால் யுத்தத்திற்கு பின்னர் நாங்கள் செலவினத்தை கட்டுப்படுத்தினோம்.
2014 இல் இது 18.3 வீதமாக காணப்பட்டது. உள்சார் கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்வதற்காக எனது அரசாங்கம் கடனை பெற்றிருந்தது. ஆனால் அக்கடன்கள் 2 சதவீதம் அல்லது அதற்கு குறைவான வட்டியிலேயே சலுகை கடனாக நீண்டகால அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டன.
அத்துடன் பல வருடங்களுக்கு அக்கடன்கள் செலுத்த வேண்டியதாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய அரசாங்கத்தை போன்று நுவர்வுக்காக நாங்கள் கடனை ஒருபோதும் பெற்றுக்கொண்டதில்லை. வரவு செலவுத் திட்ட யோசனைகளை முழுமையாக மாற்றியமைப்பது போன்ற நிதி பயஸ்கோப்புகள் முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை.
பாராளுமன்றத்தில் தனது விசேட அறிக்கையின் போது அரச ஊழியர்களின் சம்பளங்களையும் ஓய்வூதியங்களையும் தான் அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார். எரிபொருள், காஸ், சீனி, ரின்மீன்களின் விலையை குறைத்ததாக தெரிவித்திருந்தார்.
வாக்குகளை வென்றெடுப்பதற்காக ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்டிருந்த பொறுப்பற்ற உறுதிமொழிகள் யாவற்றையும் நிறைவேற்ற வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
வரி செலுத்துவோர் பெரும் பாதிப்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் வாக்குகளை வென்றெடுப்பதற்கான முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதை தற்போதைய நிலைமை வெளிப்படுத்துகின்றது.
2015 முதல் ஒன்பது மாதங்களில் வேலைவாய்ப்பின்மை வீதம் 1 வீதத்தில் அதிகரித்திருந்தது. ரூபாவின் பெறுமதி 10 வீதத்திற்கும் மேலாக மதிப்பிழந்திருந்தது. 2014 இன் இறுதியில் 8200 மில்லியன் டொலருக்கும் அதிகமாக இருந்த அந்நிய செலாவணி கையிருப்புகள் 5000 மில்லியன் டொலருக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
எதிர்வரும் மாதங்களில் அதிகளவு மேலும் வரி அதிகரிப்புகளையும் நலன்புரி நடவடிக்கைகளில் வெட்டுக்களையும் நீர், மின்சாரம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து செலவினங்களில் அதிகரிப்பையும் எதிர்பார்க்க முடியும்.
இந்த அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவம் மேலும் தொடர்ந்தால் இந்த நிலைமையை எதிர்கொள்ள முடியும். பொது மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ள நெருக்கடிகளுக்கு தற்போதைய அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று ராஜபக்ஷ கூறியுள்ளார்.
Thinakkural