வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடத் தயார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இரண்டு வார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்க்ளி பல்கலைக்கழகத்தில் பேசினார். அப்போது அவரிடம் வரும் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயார். ஆனால் இதுகுறித்து நான் முடிவு செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
அவர் மேலும் பேசியதாவது: பெரும்பாலான நாடுகளில் வாரிசு அரசியல் பிரச்சினை உள்ளது. இதேபோல இந்தியாவில் செயல்படும் அனைத்து அரசியல் கட்சிகளிலும் வாரிசு அரசியல் பிரச்சினை நீடிக்கிறது. நான் மட்டுமல்ல, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் (முலாயம் சிங் மகன்), திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் (கருணாநிதி மகன்) ஆகியோரும் அரசியல் வாரிசுகள்தான்.
காங்கிரஸ் கட்சி கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. கடந்த 2012 முதல் மக்களிடம் கலந்துரையாடுவதை காங்கிரஸ் நிறுத்தியது. கட்சியில் ஏதோ ஓர் ஆணவ போக்கு தலைதூக்கியது. இவ்வாறு மக்களிடம் இருந்து விலகிச் சென்றதால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. என்னை பற்றியும் காங்கிரஸ் குறித்தும் பாஜக தவறான வதந்திகளை பரப்பி வருகிறது. இதற்காக 1,000 பேர் கணினியில் அமர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
மோடியால் பின்னடைவு
பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை, அவசரகதியில் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல் செய்தது ஆகியவற்றால் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சிறுதொழில்கள் அழிந்துள்ளன. வேளாண் தொழில் பாதிக்கப்பட்டு ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பணமதிப்பு நீக்கத்தால் மட்டும் சுமார் 2 சதவீத ஜிடிபி இழப்பு ஏற்பட்டுள்ளது.
உலகில் உள்ள அத்தனை மதங்களும் இந்தியாவில் உள்ளன. 17 ஆட்சி மொழிகள் இருக்கின்றன. சமீபகாலமாக அஹிம்சை தத்துவம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் படுகொலைகள் நடைபெறுகின்றன. மாட்டிறைச்சி வைத்திருப்பதாக குற்றம்சாட்டி முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர். தலித்துகள் தாக்கப்படுகின்றனர். நடுநிலை எழுத்தாளர்கள் கொல்லப்படுகின்றனர்.
எனக்கும் மோடிதான் பிரதமர்
நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் எனக்கும் நரேந்திரமோடி தான் பிரதமர். அவரது இந்தியாவில் தயாரிப்போம், தூய்மை இந்தியா ஆகியவை நல்ல திட்டங்கள். எனினும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் பாதுகாப்புத் துறையை சார்ந்ததாக உள்ளது. இதை மாற்றி குறு, சிறு தொழில் துறையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.