– நாபீர் பவுண்டேசனின் தலைவர் சுட்டிக்காட்டு -!
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு ஒரு போதும் இடம் அளிக்க மாட்டார்கள் என்று விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹரிஸ் கூறி வருகின்ற விதம் அவருடைய அரசியல் திருதாளத்தையே காட்டுகின்றது என்று நாபீர் பவுண்டேசனின் தலைவரும், அரசியல் விமர்சகருமான பொறியியலாளர் நாபீர் உதுமான்கண்டு தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு ஒரு போதும் இடம் அளிக்க மாட்டார்கள் என்று பிரதி அமைச்சர் ஹரிஸ் கூறுவதும், மறுபுறத்தில் இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கருத்து அல்ல என்று இக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிக்கை விடுவதும் தொடர்பாக விடுத்து உள்ள ஊடக அறிக்கையிலேயே நாபீர் உதுமான்கண்டு இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
இவரின் அறிக்கை வருமாறு:-
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு ஒரு போதும் இடம் அளிக்க மாட்டார்கள் என்று பிரதி அமைச்சர் ஹரிஸ் கூற மறுபுறத்தில் இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கருத்து அல்ல என்று இக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிக்கை விடுவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு திருட்டு அரசியலாகவே முஸ்லிம் மக்கள் காண்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் திருவிளையாடல் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதை நிராகரிக்கின்ற விடயத்தில் பிரதி அமைச்சர் ஹரிஸ் இதய சுத்தியுடனேயோ, சமூக உணர்வுடனேயோ கருத்து வெளியிடுபவராக இல்லை. மாறாக வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக கருத்து வெளியிடுவதன் மூலம் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு அவருக்கான மக்கள் ஆதரவை உறுதிப்படுத்த பார்க்கின்றார். குறிப்பாக இவ்விதம் கல்முனை மக்களை உசுப்பேற்றுவதன் மூலம் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு பகீரத முயற்சிகள் எடுக்கின்றார்.
இவர் இதய சுத்தியுடனும், சமூக உணர்வுடனும் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக கருத்து வெளியிடுபவராக இருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடத்திலோ, பாராளுமன்றத்திலோ இவர் பேசி இருக்க வேண்டும். மாறாக வேறு இடங்களில் இவர் பேசி வருவது இவருக்கு பிரசித்தியை சேர்க்கின்ற விடயம் மாத்திரமே ஆகும். பேச வேண்டிய இடங்களில் பேச வேண்டிய விடயங்களை பேசாமல் மக்களிடம் வந்து வீர வசனங்களை அவிழ்த்து விடுவது அரசியல் பச்சோந்தித்தனமே ஆகும்.
வடக்கு, கிழக்கு இணைப்பு சம்பந்தப்பட்ட விடயத்தில் கட்சி தலைமையின் நிலைப்பாடு வேறு, அவரின் நிலைப்பாடு வேறு என்று ஹரிஸ் மக்களுக்கு படம் போட்டு காட்டுவது விளங்குகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கருத்து வேறு, ஹரிஸின் கருத்து வேறு என்று தலைவர் ரவூப் ஹக்கீம் உணர்த்தி இருப்பதன் மூலமாக கட்சி தலைமைத்துவத்துக்கு கட்டுப்படுபவராக ஹரிஸ் இல்லை என்கிற செய்தியும் வெளியில் வந்து உள்ளது. ஆனால் இவ்விடயத்தில் இவருக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, குறைந்த பட்சம் இவரை எச்சரிக்காமல் இருப்பது இருவரும் கூட்டு திருடர்கள் என்கிற தீர்மானத்துக்கே எம்மை இட்டு செல்கின்றது.