ஏற்கனவே அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கியின் பணிகளை இந்தத் தொலைநோக்கி தொடரவுள்ளது. அதைக் காட்டிலும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி 100 மடங்கு அதிக ஆற்றல்மிக்கது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா விண்வெளி அமைப்புகள் இணைந்து இதை உருவாக்கியுள்ளன.
அந்த அமைப்புகளுக்காக உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் 30 ஆண்டுகள் இந்தத் தொலைநோக்கித் திட்டத்தில் பணியாற்றியுள்ளனர்.
பிரபஞ்சத்தின் பல்வேறு புதிர்களுக்கு விடைகாண இந்த விண்வெளித் தொலைநோக்கி உதவியாக இருக்கும்.
பூமியிலிருந்து ஒன்றரை மில்லியன் கிலோமீற்றர் தொலைவிலுள்ள கண்காணிப்புச் சுற்றுப்பாதைக்கு அது இறுதியில் சென்றுசேரும். அதற்குச் சுமார் ஒரு மாதம் பிடிக்கும்.
இந்தப் புதிய தொலைநோக்கி, நமது பிரபஞ்சத்தை அதன் முன்னோடிகளை விட இன்னும் ஆழ்ந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. .
13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தில் நடந்த நிகழ்வுகளைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் அதன் மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்தி தொலைதூரத்தில் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களின் வளிமண்டலங்களை ஆய்வு செய்ய முடியும் என நம்புகிறார்கள்.
அங்கு உயிர்கள் வாழ்ந்த, வாழ்வதற்கான அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்படலாம் என்ற எண்ணமும் அவர்களுக்கு உள்ளது.