அத்தோடு, விடுதலைப் புலிகளின் படகுகளை மூழ்கடிப்பதற்கு, ஐ.அமெரிக்கா உதவியது என்ற தகவலும் பொய்யானது எனத் தெரிவித்த அவர், எனினும், படகுகளின் இருப்பிடம் தொடர்பான தகவலை, ஐ.அமெரிக்க புலனாய்வுப் பிரிவு வழங்கியதை ஏற்றுக் கொண்டார்.
வொஷிங்டனை மையமாகக் கொண்ட, இலங்கை சம்பந்தமான அரச சார்பற்ற நிறுவனமொன்றுடன், அண்மையில் மேற்கொண்ட சந்திப்பொன்றின் போதே, இக்கருத்துகளை அவர் வெளியிட்டார்.
2006 தொடக்கம் 2009 வரை, இலங்கைக்காக தூதுரவராக இருந்த போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாகக் காணப்படும் பொய்யான தகவல்களை இல்லாது செய்வதற்கு அவர் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
காணப்படும் வதந்திகளில் மிகப்பெரிய வதந்தியாக, கடற்கரையில் வைத்துப் பிரபாகரனை மீட்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் காணப்படுகிறது என, அவர் தெரிவித்தார். “புதுக்குடியிருப்பிலுள்ள கடற்கரையொன்றுக்கு, பல்லாயிரக்கணக்கான உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளானவர்களை அழைத்து, அவர்களைக் காப்பாற்றுவதற்கு நான் ஒழுங்கு செய்தேன் என, இன்றுவரை ஒரு தகவல் பரவுகிறது. பிரபாகரனைக் காப்பாற்றுவதற்காகத் தான் அதைச் செய்தேன் என்று கூறப்படுகிறது.
“தமிழீழ விடுதலைப் புலிகளைக் காப்பாற்றுவதற்கு, எந்த நோக்கமும் இருந்திருக்கவில்லை. மாறாக, மோதல் இடம்பெறும் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளால் அனுமதி மறுக்கப்பட்டு, மனிதக் கேடயங்கள் போன்று பயன்படுத்தப்பட்ட உள்ளக இடப்பெயர்வுக்குள்ளானவர்களில், எவ்வளவு பேரை முடியுமே, அவ்வளவு பேரைக காப்பாற்றுவதற்குத் திட்டம் காணப்பட்டது” என்று தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான திட்டம் காணப்பட்டது என்று தெரிவித்த அவர், இலங்கை, இந்திய அரசாங்கங்களின் துணையோடு இது காணப்பட்டது என்றும் குறிப்பிட்டார். ஆனால், நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும் தானும், விடுதலைப் புலிகளால் பிடித்துவைக்கப்படுவர் என்ற அச்சத்தில், அந்தத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் இல்லாது செய்ததாகக் குறிப்பிட்ட அவர், அது நடக்குமென, தான் நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.