பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக இவ்வாண்டு மே மாதத்தில் றொட்ரிகோ டுட்டேர்ட்டே தெரிவுசெய்யப்பட்ட பின்னர், 1,900க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய பொலிஸ் தலைவர் றொனால்ட் டெலா றோசா விடுத்த அறிவிப்பிலேயே இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால், “போதைக்கெதிரான யுத்தம்” ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக றொட்ரிகோ டுட்டேர்ட்டே தெரிவித்திருந்த நிலையில், மே மாதத்தில் ஜனாதிபதியாகத் தெரிவாகிய உடனேயே, நாட்டில் போதைப்பொருள் விற்பதாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் இலக்கு வைக்கப்பட்டனர். ஜனாதிபதியாக அவர் ஜூன் 30ஆம் திகதியே பதவியேற்ற போதிலும், அவர் ஜனாதிபதியாகத் தெரிவான உடனேயே, இச்சம்பவங்கள் அதிகரித்திருந்தன.
இந்த நடவடிக்கைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாகக் குழப்பங்கள் காணப்பட்ட நிலையில், உத்தியோகபூர்வமான எண்ணிக்கையை, பொலிஸ் தலைவர் வெளியிட்டார். எனினும், போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்களைக் கொல்வதற்கான கொள்கை ஒன்று கிடையாது எனத் தெரிவித்த அவர், கொல்லப்பட்டுள்ள 1,100 பேரின் மரணங்கள் தொடர்பாக இன்னமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஏனைய 800 பேரும், போதைப் பொருளுக்கெதிரான பொலிஸ் நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்தோடு, தாம் கொல்லப்படுவோம் என அஞ்சியதன் காரணமாக, போதைப் பொருள் பாவனையாளர்கள், விற்பனையாளர்கள், கடத்தல்காரர்கள் என, சுமார் 7 இலட்சம் பேர், சரணடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பை வெளியிட்டுவரும் செனட்டரான பிராங்க் ட்ரிலோனால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் காரணமாகவே இவ்விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலின்படி, 7 வாரங்களில் 1,900 பேர் கொல்லப்பட்டமையென்பது, ஒரு நாளில் சராசரியாக 36 பேர் கொல்லப்படுகின்றனர் என்ற நிலையைக் காட்டுகிறது.
ஏற்கெனவே, ஐக்கிய நாடுகள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் என, பல்வேறு நாடுகளும் அமைப்புகளும், இந்நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.