13.05.2015 அன்று புங்குடுதீவில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து அச்சம்பவத்துடன் புளொட் அமைப்பையும், சுவிஸ்ரஞ்சன் எனும் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களையும் தொடர்புபடுத்தி, அவர் அரசியல் பிரமுகர்களுடன் இருக்கும் அவரது புகைப்படத்துடன், பல இணையங்கள், முகநூல்கள், யூடுப் போன்ற சமூக வலைத்தளங்களில் விசமப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததை நீங்கள் அறிவீர்கள்.
இதனைத் தொடர்ந்து சுவிஸ் சட்டதிட்டத்தின்படியான சட்ட நடவடிக்கைகளுக்காக சுவிஸ் பொலிசாரிடம் இது குறித்து வழக்கு கடந்த வருடம் ஆணி மாதம் அளவில், சுவிஸ்ரஞ்சன் அவர்களினால் பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கு பதிவு செய்யப் பட்டதையடுத்து இந்த விசமப் பிரச்சாரம் ஓரளவு குறைந்திருந்த போதிலும் சுவிஸ் பொலிசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
அதேபோல் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையின் பின்னர் புங்குடுதீவையும், புங்குடுதீவு மக்களையும், குறிப்பாக சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களையும் கேவலமாக விமர்சித்து ஓரிரு இணையத்தளங்களிலும் சில போலி முகநூல்களிலும் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டதையடுத்து மீண்டும் சுவிஸ் பொலிசாரின் சட்ட நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து சுவிஸ் பொலிஸார் எடுத்த தீவிர நடவடிக்கையின் எதிரொலியாக, யூடுயூப் தளத்தில் உண்மைக்கு புறம்பாக வீடியோவை பதிவு செய்த குற்றச்சாட்டில், இலங்கையை சேர்ந்தவரும், சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வதியும் சிங்களவரான திரு. டி.எம்.துஷார ஜயரட்ன என்பவருக்கு எதிராக இவ்வருடம் ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கின் இறுதி விசாரணை கடந்த 13.05.2016 வெள்ளிக்கிழமை சுவிஸ் சூரிச் விண்டேர்தூர் மாநில விசாரணை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, விசாரணை நீதிபதி திரு.ரோபெர்தோ கொலம்பி அவர்களின் முன்னிலையில், சம்பந்தப்பட்ட எல்லோரும் மொழிபெயர்ப்பாளர்கள் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து,..
“குற்றம் சாட்டப்பட்ட திரு. டி.எம்.துஷார ஜயரட்ன பதிவு செய்த யூடுயூப் (வீடியோவை) உடனடியாக அழிக்க வேண்டுமெனவும், அத்துடன் சொக்கலிங்கம் ரஞ்சனிடம், தங்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கையில் வேறு எந்தவொரு நபருக்கும் எதிராகவும் ஈடுபடக்கூடாது எனவும், இதை மீறும்பட்சத்தில் இவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் படுமெனவும்” தெரிவிக்கப் பட்டதுடன், அதனை எழுத்து மூலமும் எழுதிக் கையெழுத்து பெறப்பட்டது.
அதேபோல், மேற்படி வழக்கை தாக்கல் செய்த சொக்கலிங்கம் ரஞ்சன், “குற்றம் சாட்டப்பட்ட டி.எம்.துஷார ஜயரட்னவின் பகிரங்க எழுத்துமூல மன்னிப்பை ஏற்றுக் கொண்டு இவ்வழக்கை வாபஸ் பெறுவதேனவும், நஷ்டஈடு தேவை என்றால் அதுக்கு தனியாக பிறிதொரு வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமெனவும், அதேவேளை குற்றம் சாட்டப்பட்டவருக்கு, எதிராக எந்தவொரு தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது எனவும்” தெரிவிக்கப் பட்டது.
இதுகுறித்து சுவிஸ்ரஞ்சன் எனும் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “சிலர் தெரிந்தோ, தெரியாமலோ எனக்கெதிராக மேற்கொண்ட விசமப் பிரச்சாரத்துக்கு பலரும் துணை போய் விட்டார்கள். அதில் இவரும் ஒருவர் தான், ஆயினும் அவரது எழுத்து மூல பகிரங்க மன்னிப்பை ஏற்றுக் கொண்டு மனிதாபிமான ரீதியில் அவருக்கெதிரான வழக்கை நான் வாபஸ் பெற்றேன். அத்துடன், மேற்படி வழக்கு சகோதரி வித்தியா மரணித்து ஒருவருட பூர்த்தி தினத்தன்று, விசாரணைக்கு எடுக்கப்பட்டதை நான் நீதிமன்றத்தில் என்னால் தெரிவிக்கப்பட்ட போது நீதிபதி உட்பட அங்கிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டதுடன், தமது மனவருத்தத்தையும்” தெரிவித்தனர் என்றார்.