“புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தையே தீபாவளியாக இந்துக்களாகிய நாம் கொண்டாடுகின்றோம். “கடந்த காலங்களில் இடப்பெயர்வுகள், அகதி வாழ்க்கை, வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றால் துயரங்களை அனுபவித்து வந்த எமது மக்கள், அவற்றிலிருந்து விடுபட்டு சம அந்தஸ்துடன் கூடிய உரிமைகளுடன் வாழும் வகையில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டும் எனவும் அனைத்து மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி ஒருமித்த நாட்டில் ஐக்கியமாக சாந்தி, சமாதானத்துடன் வாழ இத் தீபாவளித் திருநாள் வகைசெய்திட வேண்டும் எனவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி, இந்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.