புதிய அரசியல் சாசனமானது பொதுஜன வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன், அதற்கு மாறாக எவரும் பொதுமக்களை ஏமாற்ற முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்த நாட்டில் உருவாக்கும் புதிய அரசியல் யாப்பானது சகல மக்களுக்கு ஏற்புடையதாகவும் நாடு பிளவுபடாத வகையிலும் ஒருமித்த நாட்டினுள் சகலரும் சம உரிமையுடன் வாழக்கூடியதாகவும் அமையும் என்பதில் எவ்வித ஐயமும்; இல்லை எனவும் அவர் கூறினார்.
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ‘கிழக்கின் எழுச்சி -2016’ தொனிப்பொருளிலான எனும் விவசாயக் கண்காட்சி நடைபெறுகின்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
‘தற்போது உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பானது மக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்களின் ஆணையைப் பெற்ற பின்னரே அமுலுக்கு கொண்டுவரப்படும். எனவே, எவரும் எவரையும் ஏமாற்றுவார்கள் என்று நாம் கற்பனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என்றார்.
‘இந்த மேடையில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. எனினும், அண்மைக்காலமாக பல்வேறு மாறுபட்ட கருத்துகள் ஆங்காங்கே தெரிவிக்கப்படுகின்றது. சில இனங்களின் அரசியல் தலைவர்கள் அவர்களுடைய இனங்களை ஏமாற்றுவதற்காக பேசி வருவதாக தெரிவிக்கின்றனர். இதற்கு பல விதமான கருத்துகளை நான் கூறலாம். ஆனால், மிகச் சுருக்கமாக கூறுவதானால், எவரும் எவரையும் ஏமாற்றவும் இல்லை. ஏமாற்றவும் முடியாது. யாரையும் ஏமாற்றி உருவாக்கப்படும் அரசியல் யாப்பு திருப்திகரமான, நிதானமான, நிலைபேறான அரசியல் தீர்வாக அமையமுடியாது’ என்றார்.
‘மேலும், சம்பூரில் இந்த விவசாயக் கண்காட்சி வரவேற்கத்தக்கது. காரணம் மீள்குடியேற்றத்துக்கு பின்னர் இவ்வாறான செயற்பாடு அவசியமானது’ எனவும் அவர் கூறினார்.