மாகாண சபைகள் தொடர்பில் கொண்டுவரப்படும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மாகாண சபைகளின் செயற்பாடு மற்றும் அதன் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், மாகாண சபைகளின் செயற்பாட்டை பாதிக்கும் எனத் தெரிவித்து, வட மாகாண முதலமைச்சர் தலைமையிலான அணி அதனை எதிர்த்து வருகின்றது. தென்பகுதியில் உள்ள சில மாகாண சபைகளும் அதனை எதிர்த்து வருகின்றது.
இந்நிலையில், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் எனவும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஊடகசந்திப்பு ஒன்றை நடத்திய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகின ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது எனவும், தமிழரசு கட்சியின் இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை நிச்சயமாக படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையும் எனவும் தெரிவித்ததுடன், ஆதரிக்க எடுத்த முடிவு தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட முடிவு எனக் கூறி ஈ.பி.ஆர்.எல்.எப் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிராகரிக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கிழக்கு மாகாணசபையில் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதன்போது, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், மத்தியகுழு உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்றுவதற்கு உதவியிருந்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாணசபையில், ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்ந்த வேறு சில உறுப்பினர்கள் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து இருந்தனர். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தது.
இந்நிலையில் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், கட்சியின் அடுத்த கட்டம் தொடர்பில் இரு அணிகளாக செயற்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.