இன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான தனது சகோதரர் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ஐந்து வருடங்களாக உகந்த வழிகாட்டி இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த நாட்டுக்கு ஒரு செம்மையான திசைமார்க்கத்தை கொடுப்பதற்கான சந்தர்ப்பம் தங்களுக்கு தற்போது கிடைத்திருப்பதாகவும் தங்களது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் அடிமட்டத்தில் இருந்து மேல்நோக்கி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவேண்டியதும் அந்த இலக்கை அடைவதற்காக அரசியலமைப்பு மற்றும் சட்டச் சீர்திருத்தங்களை அறிமுகஞ்செய்யவேண்டியதும் அவசியமாகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
‘ எனது சகோதரரின் வெற்றி குறித்து ‘ என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது ;
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினதும் கூட்டு எதிரணியினதும் ஜனாதிபதி வேட்பாளரான கோதாபய ராஜபக்ச இந்த ஜனாதிபதி தேர்தலில் தீர்க்கமான ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறார்.எவருக்குமே அசௌகரியத்தைக் கொடுக்காத வகையில் அமைதியான முறையில் இந்த வெற்றியைக் கொண்டாடுமாறு எமது கட்சியின் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் நான் வேண்டிக்கொள்கிறேன்.இந்த தேர்தலில் எமக்கு சார்பாக தீர்க்கமான முறையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இன்றைய அரசாங்கத்தின் கடந்த ஐந்து வருடகால செயற்பாடுகளே அதற்கு காரணமாகும்.அதனால், எவருக்குமே அசௌகரியத்தைக் கொடுக்காத முறையில் நாம் நடந்துகொள்ளவேண்டியது நாட்டுக்கும் மக்களுக்கும் நாம் செய்யவேண்டிய ஒரு கடமையாகும்.
கடந்த ஐந்து வருடங்களாக இந்த அரசாங்கத்தினால் கொடுமைக்கும் தொல்லைக்கும் உள்ளாக்கப்பட்ட சகலருக்கும் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைத் திட்டமொன்றை நாம் முன்னெடுப்போம்.மக்களின் ஆணையை குறுகிய அரசியல் நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்கும் பல்வேறு இனவாத, மதவாத குழுக்களுடனான பின்கதவு வழியான உடன்பாடுகளின் ஊடாக மீண்டும் ஒரு தடவை திருடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட 2015 பாணியிலான முயற்சியை தீர்க்கமான முறையில் தோற்கடித்தமைக்காக நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.அரசியல் நோக்கங்களுக்காக மதவாதத்தையும் இனவாதத்தையும் ஊக்கப்படுத்துகின்ற ஆபத்தான விளையாட்டுகளுக்கு முடிவுகட்டவேண்டிய நேரம் இப்போது வந்து விட்டது.
நாம் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து வரும் நாட்களில் மக்களுக்கு அறிவிப்போம்.இந்த தேர்தலில் மக்களினால் எமக்கு வழங்கப்பட்ட தெளிவான ஆணையைக் கருத்திற்கொண்டு பாராளுமன்ற பாரம்பரியங்களுக்கு இணங்க உகந்த முறையில் இன்றைய அரசாங்கம் செயற்படும் என்று நம்புகிறோம்.இது தாய்நாட்டுக்கும் கேசபக்த மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.