வவுனியா புதிய பஸ் நிலையத்தில், இன்று மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட காலத்தில் இருந்து தொடர்ச்சியாக தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையில், இன்று பஸ் நிலையத்துக்கு முன்பாக பஸ்களை நிறுத்த முடியாது என வவுனியா நகரசபையால் சமிக்ஞை பதாதை அமைக்கப்பட்டபோது, ஓட்டோ உரிமையாளர்களுக்கும் நகரபிதாவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
புதிய பஸ் நிலையத்துக்குள் வேறு மாவட்டங்களில் இருந்து மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் பஸ்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாகாணங்களுக்கிடையிலான சேவையில் ஈடுபடும் பஸ்கள் வீதியோரத்தில் தரித்து நின்றே சென்று வருகின்றன.
இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுவரும் நிலையில் தமது வீடுகளுக்கு முன்பாக பஸ்களை நிறுத்துவதை தடை செய்யுமாறு கோரி, அப்பகுதி மக்கள் வவுனியா நகரசபையில் தமது முரண்பாட்டை தெரிவித்திருந்தனர்.
இதன் பிரகாரம் மக்களின் நலன் கருதி வவுனியா நகரபிதா மற்றும் உப நகரபிதாவின் ஏற்பாட்டில், அப்பகுதி மக்களின் நலன்கருத்தி பஸ்களை சில மீற்றர் தூரம் சென்று மக்கள் வசிக்காத பகுதியில் நிறுத்துவதற்கு ஏதுவாக வாகனம் நிறுத்துவதற்கு தடை செய்யும் சமிக்ஞை பதாதைகளை அமைக்க திட்டமிட்டு இன்று காலை அப்பகுதியில் நகரசபை ஊழியர்களுடன் பணியை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அப்பகுதியில் தரித்து பேரூந்து நிலையத்திற்கு வரும் பயணிகளை நம்பி வாழ்வாதாரத்தை மேற்கொண்டுள்ள ஓட்டோ உரிமையாளர்கள் சாரதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக, அங்கவீனர்கள் புதிய பஸ் நிலையத்துக்கு வருவதற்கு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தம்மால் கட்டணங்களை பெறமுடியாது என்பதால் புதிய பஸ் நிலையத்துக்கு முன்பாகவே மாகாணங்களுக்கிடையிலான பஸ்கள் நிறுத்தி செல்ல வேண்டும் அல்லது பஸ் நிலையத்துக்கு உள் பஸ்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அதுவரை வாகன தரிப்புக்கு தடை விதிக்கும் சமிக்ஞைகளை அமைக்க விட மாட்டோம் என வவுனியா நகரபிதாவும் முறுகலில் ஈடுபட்டனர். இதையடுத்து பொலிஸாரும் அப்பகுதிக்கு வருகை தந்து எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுப்பதாக தெரிவித்த நிலையில், நகரசபையினர் தமது பணியை இடைநிறுத்தினர்.
அத்துடன் முறுகல் நிலையும் சுமூகமகத்துக்கு கொண்டுவரப்பட்டது.