அயர்லாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களை நிறுத்தியுள்ளன.
ஒவ்வொரு நாடும் வெவ்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இது குறுகிய காலத்திற்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் திங்களன்று காலை கூடுகிறது. வைரஸின் இந்த புதிய வடிவம் லண்டன் மற்றும் தென் கிழக்கு இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சனிக்கிழமையன்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த பகுதிகளுக்கு புதிய நான்கு அடுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். கிறிஸ்துமஸ் காலத்திற்காக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது அது மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய வடிவம் மிக ஆபத்தானது என்பதற்கும், இது தடுப்பு மருந்துக்கு வேறுமாதிரியாக எதிர்வினையாற்றும் என்பதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ள உயர்மட்ட சுகாதார அதிகாரிகள், இது 70 சதவீதம் அதிக அளவில் பரவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டதாகவும், இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் பிரிட்டனின் சுகாதாரச் செயலர் மேட் ஹென்காக் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த நாடுகளில் கட்டுப்பாடுகள்?
இந்த புதிய வகை குறித்து பிரிட்டனிடமிருந்து அறிவிப்பு வந்த ஒரு சில மணி நேரங்களில் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி வரை தடை விதிப்பதாக நெதர்லாந்து அறிவித்தது.
பிரிட்டனிலிருந்து கப்பலில் வரும் பயணிகளுக்கும் தடை விதிப்பதாக ஞாயிறன்று மேலும் தெரிவித்தது அந்நாடு.
ஞாயிறன்று பல முக்கிய ஐரோப்பிய நாடுகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
வைரஸின் இந்த புதிய வகை முதலில் செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. பின் நவம்பர் மாதம் லண்டனில் தொற்றுகள் பரவத் தொடங்கின. டிசம்பர் மாதம் தொற்றுகள் விரைவாகப் பரவியுள்ளன.
ஐயர்லாந்து
ஆண்டின் இந்த சமயத்தில் பிரிட்டனிலிருந்து ஐயர்லாந்துக்கு அதிக பயணிகள் வரும் நிலையில் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு 48 மணி நேர தடை விதிப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
ஜெர்மனி
ஞாயிறு நள்ளிரவுக்கு மேல் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என ஜெர்மனியின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் சரக்குகளை ஏற்றி வரும் விமானங்களுக்கு தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டனிலிருந்து வரும் விமானங்கள் மற்றும் ரயில்களுக்கு ஞாயிறு நள்ளிரவிலிருந்து 24 மணி நேரத்திற்கு தடை விதிப்பதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.
இத்தாலி
ஜனவரி 6ஆம் தேதி முதல் பிரிட்டலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதிப்பதாக இத்தாலி தெரிவித்துள்ளது. இந்த வைரஸின் புதிய வகையால் ஏற்பட்ட தொற்று இத்தாலியில் முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ளது என அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்டிரியாவும் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. பல்கேரியாவில் ஜனவரி 31ஆம் தேதி வரை பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
இந்த புதிய வடிவ வைரஸ் ஏன் கவனத்தைப் பெற்றுள்ளது?
இது வைரஸின் பிற வகைகளுக்கு மாற்றாக வேகமாக பரவி வருகிறது.
இந்த வகையில், வைரஸின் முக்கிய பகுதியில் மரபியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த மரபியல் மாற்றம் வைரஸின் மனித செல்களை தாக்கும் திறனை அதிகரிக்கிறது. என்கிறார் பிபிசியின் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஜேம்ஸ் கலேகர்.
“இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது என்று கூறப்பட்டாலும் இது, லண்டன் மாதிரியான ஒரு நகரத்தில் பரவியதால் அவ்வாறு தெரியலாம்.”
“இந்த புதிய வடிவம் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் மரபியல் மாற்றம் பெற்றுள்ளது. இந்த வகை மிக ஆபத்தானது என்று தற்போது சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் தற்போதுவரை தடுப்பு மருந்துகள் இதற்கு எதிராக செயலாற்றும் என்றே கூறலாம்.” என்று தெரிவிக்கிறார் ஜேம்ஸ் கலேகர்.
இந்தியாவில் நடவடிக்கை
வேகமாகப் பரவும் இந்த புதுவகை வைரஸ் திரிபு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியக் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை அவசரமாக ஞாயிற்றுக்கிழமை தனது கூட்டு கண்காணிப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தது.
இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்த மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநர் (டைரக்டர் ஜெனரல் ஆஃப் மெடிகல் சர்வீஸஸ்) திங்கள் கிழமை இது தொடர்பாக விவாதிப்பதற்கு ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளது.
இந்த உலகத் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே புதிய வடிவ திரிபுகளை சிறப்பு வல்லுநர்கள் கண்காணித்தே வருகிறார்கள் என்று பிபிசியிடம் தெரிவித்தார் உலக சுகாதார நிறுவன கொள்ளை நோயியல் வல்லுநர் மரியா வான் கெர்கோவே. (நன்றி. பி.பி.சி தமிழ்)