புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப கூடிய அரசியல் தீர்வு அவசியம் – சுமந்திரன்

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பக் கூடிய வகையிலான அரசியல் தீர்வையே எதிர்பார்த்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உடனான சந்திப்பில் இந்த விடயத்தை தாம் வலியுறுத்தியதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்ஜுடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.


எமது மக்கள் தினமும் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினோம்.அரசியல் தீர்வில் தொடர்பில் மீண்டும் வலியுறுத்தினோம்.வடக்கில் எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதோடு, இந்திய மீனவர்களின் வருகையை இந்திய அரசினால் மாத்திரமே தடுக்க முடியும் என அவரிடம் சுட்டிக்காட்டினோம். ஆதனைவிட இந்தியாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிமான ஈழத் தமிழ் அகதிகள் இருக்கின்றனர். மேலும் வேறு நாடுகளிலும் ஈழத் தமிழ் அகதிகள் வாழ்ந்துவருகின்றார். ஆகவே அவர்கள் அனைவரும் நாட்டிற்கு மீண்டும் வருகை தரக்கூடிய வகையிலான அரசியல் தீர்வினையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்பதை அவரிடம் வலியுறுத்தினோம் என தெரிவித்தார்