தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பிரபா என்றழைக்கப்படும் கலைநேசன் (வயது 46), மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் (ரி.ஐ.டி) நேற்றுத் திங்கட்கிழமை (02) காலை, கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தங்களது வீட்டுக்கு நேற்றுக் காலை 6.30க்கு வந்த, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர், தனது கணவனைக் கைது செய்து அழைத்துச் சென்றதாக, அவரது மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.
தன்னுடைய கணவரை விசாரணை செய்ய வேண்டும் என, இனந்தெரியாத நபர்கள் சிலர் அண்மைய காலங்களில் வீட்டுக்கு வந்து போனதாகவும், தங்களின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு வந்தவர்கள் மறுத்ததன் காரணமாக, தன்னுடைய கணவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தான் மறுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தன்னுடைய கணவரை, பொலிஸில் ஒப்படைப்பதாக வந்துசென்றவர்களிடம் கூறியிருந்த நிலையிலேயே பொலிஸாருடன் நேற்றுக்காலை வருகை தந்த சிலர், தனது கணவரை, காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குக் கூட்டிச்சென்று அங்கு பதிவு செய்துவிட்டு, மேலதிக விசாரணைக்காக கல்முனைக்குக் கொண்டு செல்வதாகக் கூறி அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர் என்றும் அவருடைய மனைவி தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தின் போது தனது கணவர் காணாமல் போனதாகக் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர்,இராணுவத்தினரிடம் இருப்பதாகப் பின்னர் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையிலேயே, புனர்வாழ்வளிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்றும் மனைவி கூறியுள்ளார்.
எனினும், மேலதிக விசாரணைகளுக்காக, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.