தமிழீழ விடுதலைப் புலிகளின் கனேடிய அமைப்பை இயக்குவதற்காக டொரோன்டோவுக்குச் சென்ற, தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் எனக் கூறப்படும் மாணிக்கவாசகம் சுரேஷ் என்பவரை நாடு கடத்துமாறு, கனேடிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனேடிய குடிவரவு சட்டங்களின் அடிப்படையில் சுரேஷை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
1995ஆம் ஆண்டு டொரோன்டோவில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட போது, அவரை நாடு கடத்துவதற்கு கனேடிய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. எனினும், மாணிக்கவாசகம் சுரேஷ் தொடர்பான வழக்கு வலுவிழந்துவந்த நிலையில், கடந்த வாரம் இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், மாணிக்கவாசகம் சுரேஷை நாடு கடத்துவது குறித்துக் கருத்து தெரிவிப்பதற்கு கனேடிய குடியேற்றம் மற்றும் அகதிகளுக்கான சபை மறுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனேடிய குடியேற்றம் மற்றும் அகதிகளுக்கான சபையின் தீர்மானத்தை மாற்றுமாறு கோரி, பெடரல் நீதிமன்றத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி சுரேஷ் மனுத் தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்போரை நாடு கடத்துவதை அனுமதிக்கும் குடியேற்றச் சட்டப் பிரிவின் கீழ், சுரேஷை கனடாவுக்குள் அனுமதிக்க முடியாது என்ற தீர்மானம் செம்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.