2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை புலிகளில் முன்னாள் செயற்பாட்டாளரான எமிழ்காந்தன் அம்பலப்படுத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2005ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ்ப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதற்காக, புலிகள் இயக்கத்தினருக்கு பெருந்தொகையான பணத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்தார் என்று கூறப்படும் உடன்படிக்கை, மிக விவரமாக வெகு விரைவில் அம்பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் செல்வாக்கு மிக்க உயர்பீடத்துடன் எட்டப்பட்ட பரஸ்பர பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே, புலிகள் இயக்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் முக்கியஸ்தராக இருந்த எமில்காந்தன், இலங்கை திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புலிகளுக்கும் இடையிலான உடன்படிக்கை விவகாரத்தில் எமில்காந்தன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் அவர் நாடு திரும்பியவுடன், அந்த உடன்படிக்கை குறித்த விவரங்களை சட்ட அமுலாக்கல் மற்றும் சட்டத்துறை அதிகாரிகளிடம் அம்பலப்படுத்த விரும்புவதாக அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதிகாரமும் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகள் மற்றும் எமில்காந்தனின் இலங்கையிலிருந்த உறவினர்கள், புலிகளுடன் தொடர்புடைய புலம்பெயர்ந்தோர் ஆகியோரின் முயற்சியூடாகவே இந்த விடயம் தொடர்பில் எமில்காந்தனுடன் உடன்படிக்கை செய்யப்பட்டதாக அறியப்பட்டுள்ளது.
எமில்காந்தன் என்றழைக்கப்படும் அன்டன் ஷாமில் லக்ஷ்மிகண்ணன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி முகாமையாளராக செயற்பட்டவர் என இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சர்ச்சைக்குரிய றாடா வழக்கு விசாரணையின் போது, எமில்காந்தன் எனும் பெயர் முதன்முதலில் வெளிவந்தது. றாடாவின் உயரதிகாரிகள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குச் சென்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்காக எமில்காந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது இவ்வாறிருக்க, 2005ஆம் ஆண்டில் புலிகளுடன் ஒப்பந்தங்களைக் மேற்கொண்டு தேர்தலில் வெற்றிபெற நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படும் மஹிந்த ராஜபக்ஷ, மறுபுறம் ரணில் விக்கிரமசிங்கவே விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தார் என குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இது தொடர்பான உண்மை நிலைவரங்கள், எமில்காந்தனின் வாக்குமூலத்தில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எதிர்பாராத திரும்பம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூரையைப் பிரித்துக் கொட்டும் பெரும் அரசியல் இலாபமாக அமையும் என அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். மஹிந்தருக்கும் புலிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்காதிருந்தால், ஆறு இலட்சம் தமிழ் மக்களின் வாக்குகள் காரணமாக, 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, ரணில் விக்கிரமசிங்கவே வெற்றிபெற்றிருப்பார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு கட்டங்களாக பணம் வழங்கப்பட்டதாகவும் முதல் கட்டத்தில் 180 மில்லியன் ரூபாய், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களாக கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாம் கட்டத்தில், ஜயலங்கா வீடமைப்புத் திட்டம் மூலம், 757 மில்லியன் ரூபாய், மஹிந்த ராஜபக்ஷவினால் புலிகள் இயக்கத்துக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த பணம், எமில்காந்தனால் போலியாக அமைக்கப்பட்டிருந்த 3 கம்பனிகளின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவிலாறு நீர் மறுக்கப்பட்ட போது மூண்ட போர், உக்கிரமாக நடந்துகொண்டிருந்த போதும் 130 மில்லியன் ரூபாய் பணம், புலிகளுக்கு பல தடவைகளில் கைமாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள எமில்காந்தன், தனது விசேட சட்டத்திரணியூடாக கொழும்பு விசெட உயர்நீதிமன்றத்தில் சரணடையவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயன்றார் என்ற வழக்கு, எமில்காந்தனுக்கு எதிராக பதிவாகியுள்ளது. இது தொடர்பாகவே தான் சரணடையவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அவர் சரணடைவதற்கு வழிகோலும் வகையில், அவர் மீதான சிவப்பு அறிவித்தலும் பிடியாணையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, எமில்காந்தன் சரணடையவுள்ள விவகாரம், துன்பத்தில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்துபோன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், 2005 ஜனாதிபதி தேர்தல் பகிஸ்கரிப்புக்காக மஹிந்தவின் சகோதரர் பசில் ஊடாக எமில்காந்தனுக்கு 180 மில்லியன் ரூபாய் வழங்கியதாக கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதியன்று தெரிவித்திருந்தார். இதே அலஸ் தான், ராஜபக்ஷவிடம் எமில்காந்தனை அறிமுகமும் செய்துவைத்தவராவார்.
2015 ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தேர்தல் பகிஷ்கரிப்புக்காக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பணம் வழங்கப்பட்டதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியினரால் பொலிஸில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.