உத்தரப்பிரதேஷில் ஏராளமான இஸ்லாமியர் வீடுகளை புல்டோஸர் வைத்து இடித்துக் கடாசிவிட்டு, அதை ஒரு வெற்றியாகக் கொண்டாடினார்கள் பகாசுரர்கள்.
இந்திய சுதந்திர தினம் கொண்டாடுகிறேன் என்று அனுமதிவாங்கிவிட்டு, புல்டோஸர்களின் முகப்பில் மோடி, யோகி போன்ற புன்னகை மன்னன்களின் படத்தைத் தொங்கவிட்டு அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் ஊர்வலம் போய் இந்தியாவின் மானத்தை வாங்கினார்கள். அப்புறம் IBA வர்த்தக அமைப்பு மன்னிப்புக் கேட்டு அவமானப்பட்டு, இந்தியா தலைகுனிய நேர்ந்ததெல்லாம் வெட்கக் கதை.
அந்நேரத்தில் – இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குஜராத்துக்குப் போய் புல்டோஸர் தொழிற்சாலையைப் பார்வையிட்ட பாவத்துக்காக பிரிட்டன் பாராளுமன்றத்தில் அவரைச் சும்மா கிழிகிழியென்று கிழித்தார்கள்.
புல்டோஸர் என்றாலே ஹிந்து மதவெறிச்சின்னம் என்று வெளிநாட்டினர் சொல்கிற அளவுக்கு ஆக்கிவைத்து விட்டார்கள் . புல்டோஸர் கலாச்சாரம் என்ற சொற்பிரயோகத்தையும் நிலைநாட்டிவிட்டது உபி பாஜக அரசாங்கம்.
ஏன் இந்த புல்டோஸர் புராணம்?
நீட்டி முழக்கியதெல்லாம் – தமிழ்நாட்டில் – கோயம்பத்தூரில் ஒரு தாசில்தார் செய்த ஒரு புல்டோஸர் அடாவடியைச் சுட்டத்தான்.
கிணத்துக்கடவு கோவில்பாளையத்தில் ரூட்ஸ் மல்டிக்ளீன் கம்பெனியில் கோவை மாவட்டப் பொறியியல் பொதுத்தொழிலாளர் சங்கம் சார்பில் AITUC சங்கம் வைத்திருக்கிறார்கள் தொழிலாளர்கள்.
கோவை மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியின்பேரில் தொழிற்சாலை வாசலில் தோழர்கள் கே.எம்.செல்வராஜ், வழக்கறிஞர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன், கே.சுப்பிரமணியன் பிற தொழிற்சங்கத்த தலைவர்கள் முன்னிலையில் தோழர் எம்.ஆறுமுகம் Ex MLA சங்கக்கொடியை ஏற்றிவைத்து – பெயர்ப்பலகையை நிறுவி விட்டுப் போயிருக்கிறார்.
பொழுதுவிடிந்து மறுநாளே – உள்ளூர் தாசில்தார் புல்டோஸரைக் கொண்டுவந்து கம்பத்தைச் சாய்த்து – பெயர்பலகையைப் பெயர்த்தெறிந்திருக்கிறார்.
தொழிற்சங்க உரிமையை – நீதிமன்ற உத்தரவை மீற இந்த மிஸ்டர் புல்டோஸருக்கு என்ன அதிகாரம்?
அவர் ஊருக்கு தாசில்தாரா ரூட்ஸ் கம்பெனிக்கு செக்யூரிட்டி கார்டா?
மிஸ்டர் புல்டோஸர் பதில் சொல்லவேண்டும்!
தமிழக தொழிற்துறை அமைச்சர் கவனத்துக்கு வைக்கிறேன், அத்துமீறல்களுக்கான புல்டோஸர் கலாச்சாரம் தமிழ்நாட்டில் நிகழவேகூடாது!