அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஒர்லன்டோ என்ற இடத்திலுள்ள சமபாலுறவாளர்களுக்கான இரவு விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரத துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பாப்பரசர் பிரான்ஸிஸ், இங்கிலாந்து அரசி எலிஸபெத் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
இலங்கை நேரப்படி நேற்று, பிற்பகல் 12:30 மணியளவில், குறித்த இரவு விடுதிக்குள் புகுந்த ஆயுததாரி, அங்கிருந்தோர் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்ததோடு, அவர்களைப் பணயக் கைதிகளாகவும் பிடித்து வைத்திருந்துள்ளார். இறுதியில், இலங்கை நேரப்படி மாலை 3:24க்கு சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அவரிடம் றைபிள் ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் இன்னொரு கருவியும் காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் வெளியான தகவல்களின்படி, 20 பேரே உயிரிழந்ததாகத் தெரிவித்த போதிலும், பின்னர் வெளியான உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளின்படி, குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதோடு, 53 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரில் 39 பேர், சம்பவ இடத்திலேயே வைத்து உயிரிழந்ததோடு, மேலும் 11 பேர், வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தனர். வைத்தியர்களின் கருத்தின்படி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதல், அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர், ஆப்கானிஸ்தான் பூர்வீகத்தைக் கொண்ட அமெரிக்கரான 29 வயதான ஓமர் மட்டீன் என இனங்காணப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு விசுவாசமானவராகத் தன்னை வெளிப்படுத்திய அவர், தாக்குதலுக்கு நடுவே, அமெரிக்காவின் அவசர அழைப்புத் தொலைபேசி இலக்கமாக 911க்கு அழைத்து, ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவருக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, ‘விசாரணையின் ஆரம்ப நேரம் இதுவென்ற போதிலும், பயங்கரவாதத்தினதும் வெறுப்பினதும் நடவடிக்கையே இதுவென்பதைச் சொல்வதற்குப் போதுமான விடயங்களை நாம் அறிந்துள்ளோம். அமெரிக்கர்களாக நாங்கள், கவலையிலும் கோபத்திலும் எங்களது மக்களைப் பாதுகாக்கும் திடசங்கற்பத்திலும் இணைந்து காணப்படுகிறோம்” என்றார்.
குறித்த தாக்குதல், சமபாலுறவாளர்களுக்கான இரவு விடுதியிலேயே இடம்பெற்ற நிலையில், சமபாலுறவாளர்கள் குறித்தும், ஜனாதிபதி கவனஞ்செலுத்தினார். ‘இது எங்களது சக அமெரிக்கர்களான, பெண் சமபாலுறவாளர்கள், ஆண் சமபாலுறவாளர்கள், இருபால் விளைஞர், மூன்றாம் பாலினர் ஆகிய எங்கள் நண்பர்களுக்கு, விசேடமான வருத்தம் தரும் ஒன்றாகும். நண்பர்களும் வந்து நடனமாடவும் பாடவும் வாழவும் வரும் இடத்தை, இந்தத் துப்பாக்கிதாரி இலக்குவைத்துள்ளார்” என அவர் தெரிவித்தார்.
‘இனம், சமயம் அல்லது பாலியல் தெரிவு போன்றனவற்றுக்கு அப்பால், அமெரிக்கர் மீதான தாக்குதல்கள், எங்களுடைய நாட்டை வரைவிலக்கப்படுத்தும் அடிப்படை விழுமியங்களான சமவுரிமை, தன்மானம் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களாகும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல்களைக் கண்டித்த பாப்பரசர் பிரான்ஸிஸ், ‘படுகொலை மூடத்தனத்தாலும் உணர்வற்ற வெறுப்பினாலும் உருவான இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியடைவதோடு, அதைக் கண்டிக்கிறார்” என, வத்திக்கானால் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.
தாக்குதலாளியின் பூர்வீக நாடான ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, ‘அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ஒர்லான்டோவில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரமான இத்தாக்குதலை நான், பாரபட்சமின்றிக் கண்டிக்கிறேன். பொதுமக்களின் கொலையை, எதுவுமே நியாயப்படுத்தாது” என்றார்.
இந்தத் தாக்குதல்கள் குறித்து, பிரித்தானிய அரசி எலிஸபெத் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த பிரித்தானிய அரச குடும்பம், இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர, பிரான்ஸின் ஜனாதிபதி, அந்நாட்டின் பிரதமர், பெல்ஜியத்தின் பிரதமர், பிரித்தானியப் பிரதமர், இஸ்ரேலியப் பிரதமர், ரஷ்ய ஜனாதிபதி ஆகியோரும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.