ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவின் ஓர்லான்டோவிலுள்ள சமபாலுறவாளர்களின் இரவு விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதுடன் 53 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை நேரப்படி நேற்றுப் பிற்பகல் 12:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்தோர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் வெளியான தகவல்களின்படி, துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் குண்டொன்றை அணிந்திருந்ததாகவும், இலங்கை நேரப்படி மாலை 3:24 மணிக்கு, அவர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அவரிடம் றைபிள் ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் இன்னொரு கருவியும் காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர், ஓமர் மாட்டின் என இனங்காணப்பட்டுள்ளார். பொலிஸாரின் தகவல்களின்படி, இச்சம்பவத்தை, உள்ளூர் அல்லது சர்வதேச பயங்கரவாத நடவடிக்கை என்ற அடிப்படையில் கருதி, விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.