பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் தண்டனை தீர்ப்பினால் சசிகலாவின் தமிழக முதல்வர் கனவு தகர்ந்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் தின்படி குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட ஒருவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. தற்போது சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப் பட்டுள்ளதால் அடுத்த 10 ஆண்டு களுக்கு அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்க முடியாது.
இந்த நிலையில் தீர்ப்பு வரும் நேரத்தில் கூவத்தூரில் இருந்த சசிகலா அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 20 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா நீக்கி, அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி.
சசிகலாவும் பெங்களூரு செல்ல வேண்டியிருந்ததால், கூவத்தூரில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு, போயஸ்தோட்டத்துக்கு புறப்பட்டார். அதன் பின், நீதிமன்றத்தில் சரணடைய உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டு மனு அளித்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, பெங்களூரு செல்ல சசிகலா தயாரானார்.
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு 11.50க்குச் சென்ற சசிகலா, வணங்கிவிட்டு, 3 முறை சமாதியில் அடித்து சபதம் செய்தார். 12 மணிக்கு மெரினாவில் இருந்து புறப்பட்ட சசிகலா, 12.25 மணிக்கு ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவில்லத்துக்கு சென்றார். அங்கு 10 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்ட அவர், அதன்பின் சாலை வழிப் பயணமாக காரில் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அறை எண் 43-ல் சசிகலா ஆஜராக வேண்டும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், அவர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள நீதிமன்ற அறையில் ஆஜராகலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. சரணடைய வேண்டிய நீதிமன்ற அறையை கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து மாற்றம் செய்தது. பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து 2.5 கி.மீ தூரம் வரையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
சசிகலா சரணடையும் முன்பு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்துக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் ஆகியோர் வந்தடைந்தனர். சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற அறையில் நீதிபதி அஸ்வதா நாராயணா முன்பு சரணடைந்தனர். சுதாகரன் அப்போது சரணடையவில்லை. சிறை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும் சரணடைய கால அவகாசம் தேவை என்றும் சுதாகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த கோரிக்கை மனுவை நீதிபதிகள் நிராகரித்ததால் சுதாகரன் சரணடைந்தார்.
நீதிபதி உத்தரவைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
(the Hindu)