பெட்ரோல், டீசல் பெயரில் பாஜக அரசு மக்களிடம் கொள்ளை, கோடிக்கணக்கில் வரிகளை வசூலித்துள்ளது: ராகுல் காந்தி

 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என்ற பெயரில் பாஜக அரசு கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறது, பன்னாட்டு கச்சா விலை சரியும் போது அதன் பயன்களை மக்களுக்கு அளிக்காமல் ரூ.10 லட்சம் கோடிகளை வரியாக வசூலித்துள்ளது என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். அவர் கூறியதாவது: “பாஜக அரசு 10,00,000 கோடி வரிகளாக பெட்ரோல்/எல்பிஜி/டீசல் மீது வசூலித்துள்ளது. ஆனால் குடிமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை” என்று சாடியுள்ளார்.

மேலும் ராகுல் காந்தி ஒருநிமிடம் 42 விநாடிகள் ஓடும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார், அதில், “பிரதமர் மோடியின் கீழ் எரிபொருள் விலையின் உண்மை நிலவரம்” என்று கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், “பன்னாட்டு கச்சா எண்ணெய் விலை மோடி அரசின் கடந்த 4 ஆண்டுகளில் 67% சரிந்துள்ளது, ஆனால் பெட்ரோல், டீசல் விலை வானாளவ உயர்ந்துள்ளன.

“நல்ல நாள் என்று உறுதியளித்த அரசு அமைதி காக்கிறது. பாஜகவின் விலைக்கொள்கையை திரும்பிப் பார்ப்போம். பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்துவது மத்திய அரசு தோல்வியடைந்ததின் குறியீடு, மக்கள் கோபமாக உள்ளனர், இது மற்ற துறைகளில் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்துகிறது” என்று வீடியோவில் சாடியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் அரசு வரியாக ரூ.50,000 கோடிக்கு மேல் வசூலிக்கிறது, ஆனாலும் பெட்ரோல் விலைகள் குறைக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

“ஆட்சிக்கு வந்த பிறகு சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் வரிவிதிப்பின் மூலமே 10,00,000 கோடி வசூலித்து சாமானிய மக்களை மோடி அரசு கொள்ளை அடித்துள்ளது., 2014 முதல் பெட்ரோல் மீதான மத்திய வரியை லிட்டருக்கு ரூ.8.78ம் டீசல் வரியை லிட்டருக்கு ரூ.10.37-ம் உயர்த்தியுள்ளது” என்று கடுமையாக சாடியுள்ளார் ராகுல் காந்தி.

மேலும், கர்நாடகாவில் மக்கள் தோழன் காங்கிரஸ் கட்சி மாநில பெட்ரோல் வரியை லிட்டருக்கு ரூ.3.11-ம் டீசல் வரியை லிட்டருக்கு ரூ.1.03-ம் குறைத்துள்ளது

“குறைந்தது 18.11 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்கள் பேராசைப் பிடித்த மோடி அரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மானிய வ்லை சிலிண்டர் டெல்லியில் ரூ.491.35, பெங்களூருவில் ரூ.427, (இது கர்நாடகாவில் வரியைக் குறைத்ததால்), மானியமற்ற சிலிண்டர் டெல்லியில் ரூ.635.5, பெங்களூருவில் ரூ.622.5 (வரிக்குறைப்புக்குப் பிறகு), பாஜக கொடூரமானது எரிபொருள் பெயரில் கொள்ளை அடிக்கிறது” என்று அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.