பெரும் பூனைகள் 21

புலிகள் அதிகமாக “இருக்கும்” நாடு அமெரிக்கா என்பதே உண்மை. அமெரிக்காவில் மட்டும் சுமார் ஐந்தாயிரம் புலிகளுக்கும் மேலாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை என்பது சாதாரணமானதில்லை. உலகளவில் காடுகளில், “வாழ்கிற” புலிகளை விட அமெரிக்காவில் புலிகள் அதிகம். அமெரிக்காவில் இருக்கின்ற புலிகள் அனைத்துமே செல்லப் பிராணிகளாக அடைத்துவைத்து வளர்க்கப் படுபவை. இப்போது உங்களிடமிருந்த ஆச்சரியமும், வியப்பும் காணாமல் போயிருக்கும்…

அங்கே “இருக்கிற” புலிகளுக்கும். காடுகளில் “வாழ்கிற” புலிகளுக்கும் மிகுந்த வேறுபாடுகள் உண்டு. மனிதர்களைப் போலவே நோய்வந்து மனிதர்களைப்போலவே ஊசிமருந்துகளையும் ஊட்டச்சத்துகளையும் உடலில் செலுத்தி, பழனிமலை கோயிலில் வாழ்கிற குரங்குகளைப் போல இருந்த இடத்திலேயே, உணவிற்காக பெரிதாக உடலியக்கம் செய்யாமல் புளிசாதமும், தயிர்சாதமும் தின்று உடல்பெருத்து வாழ்வதைப் போலவே வாழ்பவைகள் அமெரிக்கப் புலிகள். அவைகள் கிட்டதட்ட வேட்டையாடுகிற இயல்பூக்கத்தை இழந்து ஊனமாகிவிட்டவை என்றே சொல்லலாம். அவைகளை காடுகளில் விட்டால்கூட வாழ்வது கொஞ்சம் கடினம்தான்…

அமெரிக்கா புலிகளை ஏன்வளர்க்கிறார்கள் என என்னிடம் காரணம் கேட்டால், உங்களிடம் திருப்பி அவர்கள் ஏன் பாம்புகளையும் iguana போன்ற ஓணான்களையும் வளர்க்கிறார்கள் ? என நானும் கேட்பேன். அதற்கான பதில் உங்களிடமும் இருக்காது, அவர்களிடமும் இருக்காது. ஆனால் நம்ம ஊரில் ஏன் நாய் வளர்க்கிறார்கள் ? எருமை வளர்க்கிறீர்கள் ? ஆடு,மாடு வளர்க்கிறார்கள் ? என்பது பற்றியெல்லாம் கேட்டால் அதற்கு எல்லோருமே பதில் சொல்ல முடியும். காரணமின்றி ஒரு காரியம் செய்பவர்கள் யார் என்று கேட்டால், நம் அனைவரிடத்திலும் பதில் இருக்கிறது…

அமெரிக்காவில் இருக்கும் புலிகளில் வெறும் ஆறு சதவிகிதம் மட்டுந்தான் அந்த நாட்டின் Association of zoos & aquariums ன் அனுமதி பெற்றவை. மற்றவைகள் எல்லாம் அந்தந்த மாகாணங்களிலோ அல்லது US department of Agriculture ரிடமோ அனுமதி பெற்றதாக இருக்கும் அல்லது எந்தவிதமான அனுமதியும் பெறாமல் வளர்ப்பவை…

உங்களுக்கு இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரலாம். நம்ம நாட்டில் புலி நகம் போன்ற மாட்டுக்கொம்பை வைத்திருந்தாலே தோண்டித்துருவி விசாரித்து, தீவிர நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் நமது வீட்டு நாய்களைப் போல புலிகளை வளர்ப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை. இதுதானே!….

அமெரிக்காவில் பல மாகாணங்களில் நாய்களை எடுத்து வளர்ப்பதில் உள்ள சிக்கலைவிட ஒரு புலியையோ, சிங்கத்தையோ அல்லது மலைச்சிங்கத்தையோ நீங்கள் வீட்டு விலங்காக எடுத்து வளர்ப்பது மிகவும் எளிது….

WWF கூட ஒரு விசயத்தை நியாயப் படுத்தி பேசுகிறார்கள். இதுமாதிரி வளர்ப்பு மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்குத் தேவையானவை கிடைக்காதபோது, புலிகளின் உடல் பாகங்களுக்கு டிமாண்ட் உருவாகும். அதன் விளைவாக காட்டில் வாழும் புலிகளை கள்ளவேட்டையும், கடத்தலும் அதிகமாகும் எனக் கூறுவது, கொஞ்சமல்ல நிறைந்த விநோதமானது…

நாட்டிற்கு தகுந்தபடியும் சூழ்நிலைக்கு தகுந்தபடியும் பேசுவதை புலி அரசியல் எனலாம். இந்த பூமியில் வனத்துறை மற்றும் இதுபோன்ற அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்ட துவக்க காலத்தில், உலகளவில் பெரும் பூனைகளின் எண்ணிக்கை எவ்வளவு ? இன்றைக்கு இதுபோன்ற அமைப்புகள் பலநூறுகோடி செலவில் தீவிரமாக இயங்கும்போது அவற்றின் எண்ணிக்கை எவ்வளவு ?

என கணக்கைப் போட்டுக்கேட்டால் நாம் முட்டாளாக்கப் படுவோம்….
அமெரிக்கா மட்டுமல்லாமல், சீனவோடு சேர்த்து கிழக்காசிய நாடுகளில் சிலவற்றிலும் பாரம்பரிய மருத்துவம் என்கிற பெயரில் மருந்து தயாரித்து தின்பதற்காக வளர்க்கப்படுகிற புலிகளோடும் சேர்த்து, உலகம் முழுவதும் அடைத்து வளர்க்கப்படும்(captivated tigers) புலிகள் மட்டும் பத்திலிருந்து பதினைந்தாயிரம் இருக்கும் என்கிறார்கள்…

ஆனால் காட்டில் வாழும் புலிகளின் எண்ணிக்கையோ வெறும் நான்காயிரத்திற்கு கீழேதான் என்பது மிக வருத்தத்திற்குரிய விசயம். காட்டில் வாழ்கிற புலிகள் அதிகளவு எண்ணிக்கையில் இருப்பது இந்தியாவில்தான். சுமார் 70% புலிகள் இங்குதான் இருக்கிறது…
எமக்கு அதுபற்றி தெரியாததால், இங்கே சில கேள்விகளை வைத்திருக்கிறேன். அதற்கு துறைசார்ந்த நண்பர்களோ, அல்லது ஆர்வலர்களோ மனசாட்சியோடு முடிந்தவரை நியாயமான கருத்தை சொல்வீர்கள் என எதிர்பார்த்து பேரன்புடன்,