பாகிஸ்தான் தற்போது கடன் நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இந்தியாவின் தெற்கு எல்லையில் உள்ள இலங்கையை அடுத்து தற்போது வடக்கு எல்லையில் உள்ள பாகிஸ்தானும் திவால் நிலைக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது அந்த நாட்டின் அன்றாட வாழ்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது.
பாகிஸ்தான் மின்சார துறையின் கடன் கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி ரூ.2.253 லட்சம் கோடியாக (பாக். மதிப்பில்) இருந்தது. இது, தற்போது ரூ.2.437 லட்சம் கோடியாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் மின்சார பயன்பாட்டை வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார்.
பணியாளர்களுக்கு சம்பளமில்லை: ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு பணிக்கொடையாக வழங்க வேண்டியசுமார் ரூ. 2,500 கோடி ரூபாயை செலுத்த இயலாத நிலையில் பாகிஸ்தான் உள்ளது.
மேலும், ஊழியர்களின் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கூட வழங்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 15 முதல் 20 நாட்கள் இடைவெளிக்குப் பிறகே சம்பளம் வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக தங்களுக்கு சம்பளம் கிடைக்காததால், ரயில் ஓட்டுனர்கள் நாடு முழுவதும் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
எரிசக்தி துறையில் கடன் அதிகரித்து மின்சாரத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாடு முழுவதும் மின்சார பயன்பாட்டை குறைப்பதற்கான திட்டங்களை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
அதன்படி சந்தைகளை இரவு 8.30 மணிக்குள்ளும், திருமண மண்டபங்களை இரவு 10 மணிக்குள்ளும் மூட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
“இந்த திட்டத்தால் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்படும். அதனால், ரூ.6,000 கோடி மிச்சமாகும். அதேபோன்று அதிக மின்சார செலவு பிடிக்கும் மின்விசிறிகளின் உற்பத்தியையும் ஜூலைக்குள் நிறுத்தப்படவுள்ளது” என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு அலுவலகங்களிலும் மின்சார பயன்பாட்டுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது, பாகிஸ்தான் மிகவும் அபாயகரமான நிலைக்கு அருகில் உள்ள உள்ளதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே பொருளாதார மந்த நிலையில் இருந்த பாகிஸ்தானை கடந்தாண்டில் ஏற்பட்ட வெள்ளம் மேலும் புரட்டிப்போட்டது. வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவால் பொருளாதார வளர்ச்சியானது பட்ஜெட்டில் குறிப்பிட்ட இலக்கை விட குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பணவீக்கம், வேலையின்மை, செலாவணி கையிருப்பு சரிவு ஆகியவற்றால் ஆட்சியாளர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
பொருளாதார கண்ணோட்டத்தின் அடிப்படையில், பாகிஸ்தானின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீதமாக இருந்த நிலையில், 2022-23 ஜூலை-அக்டோபர் காலத்தில் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வெள்ளத்தால் அதிக செலவினங்கள் ஏற்பட்டதே நிதி நெருக்கடி அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள சூழ்நிலையில், அங்கு போட்டி அரசு அமைக்க பயங்கரவாத அமைப்புகளும் முயன்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்பாக தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பு போட்டி அரசு அமைத்துள்ளதை வெளிப்படையாகவே அறிவித்தது.
இதுபோன்ற நிகழ்வுகளால், ஸ்திரமற்ற சட்ட-ஒழுங்கு சூழ்நிலை உருவாகி திவால் நிலைக்கு ஆளாகும்சூழலுக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.
அபாய சூழலில் தற்போதைய நிகழ்வுகளை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் பெற்ற கடன்களை திரும்பச் செலுத்த பாகிஸ்தான் தேவையான அவகாசத்தை கோரவேண்டும்.
அத்துடன், சர்வதேச நிதியம் உள்ளிட்ட பிற கடன் அமைப்புகளிடம் உடனடியாக உதவியை நாடுவதே பாகிஸ்தான் திவால் நிலைக்கு ஆளாவதை தடுக்கும் அறிவார்ந்த நடவடிக்கையாக அமையும் என்கின்றனர் சர்வதேச பொருளாதார வல்லுநர்கள்.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி ரயில்வே துறையையும் விட்டுவைக்கவில்லை. 3 நாட்களுக்கே எரிபொருள் இருப்பு உள்ளதால், சரக்கு,பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு பாகிஸ்தான் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.