ஐக்கிய அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசாங்க முடக்கம், 20ஆவது நாளாக நேற்றும் (10) தொடர்ந்தது. அத்தோடு, பேரம்பேசல்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இந்த முடக்கம், ஐ.அமெரிக்காவில் ஏற்பட்ட மீக நீண்ட அரசாங்க முடக்கமாக இது மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது.அரசாங்கம் இயங்குவதற்குத் தேவையான சட்டமூலம் தொடர்பில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் காணப்படும் வேறுபாடே, இந்நிலைமையைத் தோற்றுவித்துள்ளது.
ஐ.அமெரிக்காவுக்கும் மெக்ஸிக்கோவுக்கும் இடையில், எல்லைச் சுவரொன்றை அமைப்பதற்கு, 5.7 பில்லியன் ஐ.அமேரிக்க டொலரை வழங்க வேண்டுமென்பது, ஜனாதிபதி ட்ரம்ப்பின் கோரிக்கையாகும். அதை உள்ளடக்காத எந்தவொரு சட்டமூலத்தையும் அங்கிகரித்துக் கையெழுத்திடப் போவதில்லை என, அவர் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பான பேரம்பேசல் பேச்சுவார்த்தைகள், இலங்கை நேரப்படி நேற்று (10) அதிகாலை இடம்பெற்ற போது, அக்கூட்டத்திலிருந்து, ஜனாதிபதி ட்ரம்ப் வெளியேறினார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்புத் தொடர்பாக, தனது டுவிட்டரில் பின்னர் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், “முழுவதும் வீணான நேரம். போய் வருகிறேன் என்று சொன்னேன். வேறு எதுவும் பயனளிக்காது” எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, செனட்டில் ஜனநாயகக் கட்சியின் தலைவரான சக் ஷூமர், இப்பேச்சுவார்த்தைகளின் போது, மேசையில் தட்டிய ஜனாதிபதி ட்ரம்ப், கோபத்துடன் எழுந்து வெளியேறினார் எனக் குறிப்பிட்டார். அத்தோடு, ஜனாதிபதியின் நடவடிக்கைகள், ஜனாதிபதிப் பதவிக்குப் பொருத்தமற்றனவாக மாறி வருகின்றன எனவும் தெரிவித்தார்.
ஐ.அமெரிக்க வரலாற்றில் அதிக காலம் நீடித்த அரசாங்க முடக்கம், 21 நாள்கள் நீடித்திருந்தது. எனவே, நாளை சனிக்கிழமை வரை இந்த அரசாங்க முடக்கம் நீடிக்குமாயின், அந்நாட்டு வரலாற்றில் நீண்டகாலம் நீடித்த அரசாங்க முடக்கமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.