பொதுத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் நாள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவினால், 31.03.2020 மற்றும் 01.04.2020ஆம் திகதிகளில், ஜனாதிபதியின் செயலாளர் பேராசிரியர் பி.பீ.ஜயசுந்தரவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களுக்கு பதிலளிக்கும் வகையில், தேசப்பிரியவுக்கு இன்று (09) அனுப்பிவைத்த கடிதத்திலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் வருமாறு,
அதில் அவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதங்கள், தன்னுடைய அலுவலகத்துக்குக் கிடைப்பதற்கு முன்னரே, ஊடகங்களுக்கும் ஏனைய சில தரப்பினருக்கும் கிடைத்திருந்தமையானது, தன்னை ஆச்சரியப்பட வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
“அந்த வகையில், 2020.03.02ஆம் திகதியன்று, 2165/8ஆம் இலக்க வர்த்தமானியின் ஊடாக, அன்றைய தினம் நள்ளிரவு வெளியிடப்பட்ட அறிவித்தல் படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய நாடாளுமன்றம், 2020 மே மாதம் 14ஆம் திகதி கூடுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது.
“அத்துடன், 2020 ஏப்ரல் 25ஆம் திகதியன்று, புதிய நாடாளுமன்றத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நடத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
“அதன் பின்னர், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை, பல கட்சிகளும் அறிவித்திருந்தன. அத்துடன் நின்றுவிடாது, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் பலவும், பொதுத் தேர்தலின் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களையும், பொதுத் தேர்தல்கள் சட்டத்தின் 15ஆவது உறுப்புரையின் பிரகாரம் தாக்கல் செய்திருந்தன.
“அத்துடன், பொதுத் தேர்தல்களின் சட்டத்தின் 16 மற்றும் 17ஆவது உறுப்புரைகளின் கீழ், கட்டுப்பணங்களும் செலுத்தப்பட்டிருந்தன. அதன்படி, நாடாளுமன்றத்தைக் கலைத்தல், தேர்தலுக்கான நாளைக் குறித்தல், வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் நாள் மற்றும் உரிய தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம், தங்களுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தல் போன்ற அனைத்து விடயங்களையும், அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொண்டு செயற்படுத்தியுள்ளனர்.
“பொதுத் தேர்தல்கள் சட்டத்தின் 24ஆவது உறுப்புரையின் 24(1) பிரிவின் A முதல் D வரையான உப பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டிந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவால், வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட வேண்டியிருந்தது.
“அதாவது, 2020 ஏப்ரல் 25அம் திகதியன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில், பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் வாக்கெடுப்புகள் நடைபெறும் தேர்தல் மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டும், 2020.03.20ஆம் திகதியன்று, 2167/12அம் இலக்க வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது.
“அதன் பின்னர், 2020.03.21ஆம் திகதியன்று, தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட 2167/19ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில், 2020.04.25ஆம் திகதியன்று தேர்தலை நடத்த முடியாதென்றும் 2020.04.30ஆம் திகதி முதல் 14 நாள்களுக்குப் பின்னரான எந்தவொரு நாளிலேனும் தேர்தல் நடத்தப்படுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
“அவ்வாறே, 2020.04.25ஆம் திகதியன்று தேர்தலை நடத்த முடியாவிடின், 24(03) பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், தேர்தலை நடத்தக்கூடிய வேறொரு தினத்தை விசேடமாகக் குறிப்பிடுவதற்கு, 24(03) பிரிவு விதிகளின் படி ஆணைக்குழுவாலேயே முடியுமென்பதை, வருத்தத்துடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
“அத்துடன், வாக்கெடுப்பு நடத்துவதற்கான திகதி, பொதுத் தேர்தல்கள் சட்டத்தின் 24(3) பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாள் முதல் 14 நாள்களுக்குப் பின்னர் இடம்பெற வேண்டுமெனவும் குறிப்பிட விரும்புகிறோம்.
“ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்றுள்ள ஆலோசனைகளுக்கமைய, 2020 மே மாதம் 28ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ தேர்தலை நடத்த முடியுமென்று, தற்போதைய நிலையில் குறிப்பிட முடியாது.
“தேர்தலுக்கான திகதியைக் குறிக்கும் பொறுப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளதென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கோ அல்லது பொறுப்புகளுக்கோ, ஜனாதிபதியால் குறுக்கிட முடியாதென்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
“ஒத்திவைக்கப்பட்ட தேர்தலுக்கான வாக்கெடுப்பு தொடர்பான அறிவிப்புக் காலப்பகுதியை, பொதுத் தேர்தல்கள் சட்டத்தின் 24(3) உறுப்புரைப்படி, 14 நாள்களுக்குக் குறையாத காலப்பகுதியாகவும் அதாவது, ஒத்திவைக்கப்பட்ட வாக்கெடுப்பு, ஒத்திவைக்கப்பட்ட நாள் முதலான 15ஆவது நாளில் நடத்த முடியுமென்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
“எவ்வாறாயினும், தங்களுக்கான வாக்குரிமையைப் பயன்படுத்தும் உரிமை, இந்நாட்டு மக்களுக்கு இருக்கின்றதென்றும் அது அவர்களின் இறையாண்மை உரிமையென்றும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
“மேற்கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும் சுருக்கக் கூறுவதாயின், அரசமைப்பின் 129ஆவது உறுப்புரையின் கீழ், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையைக் கேட்க வேண்டிய தேவை இல்லை என்பதை, இக்கடிதம் மூலம் அறிவிக்குமாறு, எனக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” என்று, ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.