பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக றொட்ரிகோ டுட்டேர்ட்டே தெரிவான பின்னர் போதைக்கெதிரான போர் என்ற பெயரில் அந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை, மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு, ஜனாதிபதி டுட்டேர்ட்டே கோரியுள்ளார்.
இவ்வாண்டு மே மாதத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற டுட்டேர்ட்டே, ஜூன் 30ஆம் திகதி பதவியேற்க முன்னரே, இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதோடு, இதுவரையிலும் 3,000க்கும் மேற்பட்டோர் இந்நடவடிக்கையின் பின்னர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு, சர்வதேசரீதியில் பல்வேறு எதிர்ப்புகள் காணப்பட்டாலும், இதைத் தொடர்வதற்கு அவர் உறுதி பூண்டுள்ளார்.
“நான் ஜனாதிபதியாக வரும்வரை, இந்நாட்டில் காணப்படும் போதைப்பொருள் பிரச்சினை, எவ்வளவு பாரியளவில் காணப்படுகிறது என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை” என, ஜனாதிபதி டுட்டேர்ட்டே குறிப்பிட்டார். தனது இந்த நடவடிக்கைகளை, கொள்கலன் ஒன்றிலிருந்து புழுக்களை அகற்றுவதைப் போன்றதென வர்ணித்த அவர், இதை முழுமையாக முடிப்பதற்கு, இன்னமும் 6 மாதங்கள் இதை நீடிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரால் கொல்லப்பட்டவர்களென உத்தியோகபூர்வ 1,105 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தவிர, உயிரிழந்த 2,035 பேரை யார் கொன்றார்கள் என்பது குறித்துக் கேள்வியெழுகின்றமை குறிப்பிடத்தக்கது.