சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் கோட்டையாக கடந்த ஒரு ஆண்டு காலமாக விளங்கி வந்த நாரஹேன்பிட்டிய அபயராமய விகாரைக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன செல்லவுள்ளார். நாளை சிறிலங்கா அதிபர் அபயராமய விகாரைக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மைத்திரிபால சிறிசேன அபயராமய விகாரைக்குச் செல்வதில் அரசியல் முக்கியத்துவம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபயராமய விகாரையின் ஞாயிறு பாடசாலை மாணவர்களுக்குப் பரிசளிக்கவே அவர் அங்கு செல்லவுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியை இழந்த பின்னர், அபயராமய விகாரையில் இருந்தே, தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அரசாங்கத்துக்கு எதிரான குறிப்பாக சிறிலங்கா அதிபருக்கு எதிரான பரப்புரைக்கு அவர் இந்த விகாரையையே பயன்படுத்தி வந்தார். அத்துடன் தனது ஆதரவு அணியினருடனான சந்திப்புகளையும் மகிந்த ராஜபக்ச இங்கேயே நடத்தி வந்தார். இந்த விகாரையை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த சிறிலங்கா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்தே, ஓரிரு வாரங்களாக இந்த விகாரை அரசியல் செயற்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.