“மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் வேண்டாம் அல்லது மயானங்களை நவீனப்படுத்துங்கள்“ என்ற கோரிக்கையை முன்வைத்து 13.05.2017 இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தது. ஏராளமான பெண்களும் இளைய தலைமுறையினரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். பலரிடமும் இந்தப் பிரச்சினை தொடர்பான தெளிவான புரிதல் இருந்தது. புதிய சனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி (New-Democratic Marxist-Leninist Party, NDMLP) யின் செயலாளர் சி. கா. செந்தில்வேல், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலர் சுகு ஸ்ரீதரன் ஆகியோர் உள்பட பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசினார்கள்.
“மக்கள் எதிர்கொள்கின்ற இந்த மாதிரியான அடிப்படைப்பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கும் இந்த மாதிரியான போராட்டங்களைக் கவனிப்பதற்கும் ஊடகங்கள் தவறுவது வருத்தமளிக்கிறது. அரச பிரதானிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்களைப் பின்தொடர்கின்ற, அவர்கள் செல்லுமிடமெல்லாம் திரள்கின்ற ஊடகங்கள் மக்களின் போராட்டங்களின்போதும் அவர்களுடைய பிரச்சினைகளை முன்னெடுக்கின்றபோதும் திரள்வது குறைவாக உள்ளது“ என்ற நிலைமையைச் சி.கா. செந்தில்வேல் சுட்டிப் பேசினார்.
“சமூக நீதியில்லாத அரசியல் உரிமைகள் சாத்தியமில்லை. அவற்றில் அர்த்தமுமில்லை. தமிழ்ச்சமூகம் தன்னுடைய ஜனநாயக உரிமைகளை மேம்படுத்திக்கொண்டே ஜனநாயக அடிப்படைகளைப் பற்றிப் பேச வேணும். மாகாணசபை பொறுப்புச் சொல்ல வேண்டிய பல விசயங்களுக்குப் பொறுப்புக் கூறாமல் உள்ளது. பல நியதிச்சட்டங்களை உருவாக்க வேண்டும். மக்களுக்கான தேவைகளை அவற்றின் மூலமே நிறைவேற்ற முடியும்“ என்ற தொனிப்படச் சிறப்பானதொரு உரையை சுகு ஸ்ரீதரன் ஆற்றியிருந்தார்.
“மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் வேண்டாம் அல்லது மயானங்களை நவீனப்படுத்துங்கள்“ என்ற கோரிக்கையின் பின்னாலுள்ள இந்தப் பிரச்சினையை இதற்கான சமூக வரலாற்றுப் பின்புலத்தில் விளங்கிக்கொள்வது அவசியமானது.
நல்ல நிலமும் நல்ல தண்ணீர்க்கிணறுகளும் சாதி ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருக்கவில்லை. அவை மேல்நிலைச் சாதிப் பிரிவினர் என்ற ஆதிக்கத்தரப்பினரின் கைகளிலேயே இருந்தன. யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பிரதேசங்களின் வரலாற்றையும் சமூகக் கட்டுமானத்தையும் அவதானித்தாலே இது சுலபமாகப் புரியும்.
அதேவேளை ஒதுக்குப் புறங்களும் வளங்குன்றிய இடங்களுமே சாதி ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன. இதனால் இந்த மக்கள் கூலிகளாகவும் குடிமைகளாகவும் இருக்க வேண்டியிருந்தது. ஒதுக்குப்புறங்களில்தான் மயானங்களும் இருந்தன. ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லா இடங்களிலும் காணிகளை வாங்க முடியாது என்ற எழுதா விதி சமூக ரீதியாகப் பின்பற்றப்பட்டு வந்ததால், சாதிரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் தாங்கள் இருந்த ஒதுக்கு நிலங்களிலும் மயானங்களுக்கு அண்மித்த நிலங்களிலுமே குடியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். குடிப்பரம்பலில் காணி தேவைப்பட்டபோது அவர்களுக்கு இவ்வாறான தேர்வைத்தவிர, வேறு வழிகள் இருக்கவில்லை.
புலம்பெயர்ந்து சென்றவர்களின் வளமான காணிகள் ஆட்களில்லாத நிலையில் காடும் தரிசுமாக இருந்தாலும் அதை விற்பதற்கு அவர்கள் சாதி ரீதியாகத்தான் சிந்திக்கிறார்களே தவிர, எவருக்கும் அவற்றை விற்கலாம் என்று எண்ணவில்லை என்பதையும் இங்கே நினைவிற்கொள்ள வேணும். ஆகவேதான் குடியிருப்புகளுக்கு அண்மையாக மயானங்கள் என்ற நிலை வந்தது. இதே நிலை எதிர்காலத்தில் எல்லா இடங்களுக்கும் வரப்போகிறது. குடிப்பரம்பல் அதிகரிக்கும்போது இவ்வாறு ஏற்படும்.
ஆகவே இங்கே கவனிக்க வேண்டியது, இந்த மயானங்களை வேறு இடத்துக்கு மாற்றுவது. இது வேறு இடமிருந்தால் மட்டும். அல்லது மயானங்களை நவீனப்படுத்துவது. இவையே தீர்வாகும். இதற்குப் பொறுப்பாக இருப்பது மாகாணசபையும் அதன் கீழ் உள்ள பிரதேச சபைகள், மாநகரசபைகள், நகரசபைகளுமாகும்.
ஆனால், இவை உரிய நடவடிக்கையை இந்த விடயத்தில் எடுக்கவில்லை. எடுப்பதில் ஆர்வமும் இல்லாதிருக்கின்றன. இவ்வளவுக்கும் நீதிமன்ற அறிவுறுத்தல் கூட இந்த மயானங்களை நவீனப்படுத்தி, சனங்களுடைய சிரமங்களைப் போக்குமாறே உள்ளது. இருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காரணம், மாகாணசபை, பிரதேச சபை, நகரசபை, மாநகர சபை போன்றவற்றின் நிர்வாகம் அடிநிலைச்சமூகத்தின் உணர்வுகளையும் நிலைமைமையும் புரிந்து கொள்ள முடியாத மேலாதிக்கிகளின் கைகளில் இருப்பதே.
உண்மையில் இதைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது பிரதேச சபை, நகரசபை, மாநகரசபை, மாகாணசபை போன்றவற்றின் பணியாகும். இவை தமது ஆளுகைக்குட்பட்ட மயானங்களை நவீனப்படுத்த வேணும். அதற்கான பொறிமுறையை உருவாக்கவேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. இதைப்பற்றிய கோரிக்கைகளையும் முறைப்பாடுகளையும் முன்வைத்த மக்கள் அவற்றுக்கான நடவடிக்கைகள் இல்லை என்ற நிலையிலேயே இப்போது போராட முன்வந்திருக்கிறார்கள்.
ஆனால், இந்தப் போராட்டத்தைப் பற்றியும் இந்த மக்களுடைய கோரிக்கைகளைப்பற்றியும் எதிர்மறையான கருத்துகள் முகப்புத்தகத்திலும் பொதுவெளியிலும் முன்வைக்கப்படுகின்றன. மயானங்கள் எப்பொழுதும் ஒதுக்கிடங்களில்தான் இருந்தன. அவற்றுக்கு அண்மையில் சென்று மக்கள் குடியேறினார்களே தவிர, அவை மக்கள் குடியிருப்புகளை நோக்கி வரவில்லை என்ற தொனிப்பட.
“சுடலைக்குப் பக்கத்திலயா இருக்கிறீங்கள்?” சுடலையடிக்காணிக்கு என்ன பெரிசாப் பெறுமதி? ஆர் அதுக்குள்ள போயிருக்கிறது?“ என்றெல்லாம் ஊர்களில் சொல்லப்படுவதொன்றும் புதிதல்ல. இருந்தும் அப்படியான காணிகளில்தான் இந்த மக்கள் வாழ்கிறார்கள். இந்த நிலைமையில்தான் யாழ்ப்பாணத்தின் சமூகக் கட்டுமானமும் பொது நியதியும் பொது நீதியும் உள்ளது.
ஆகவே மயானங்களை அண்மித்திருப்போரின் உளநிலை, சமூக நிலை, வாழ்நிலை, பொதுச் சூழலியல் போன்றவற்றை மனதில் கொண்டு செயற்படுவது அவசியம் என்று கருதுகிறேன்.