மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மாநாகரசபையின் ஆணையாளராக சிறுபான்மையினத்தினைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் இன்று நியமிக்கப்படப்போவதாகவும், இதனை ஏற்க முடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இன்று(16) திங்கட்கிழமை இதுபற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாநாகரசபைக்குள் 48கிராமங்களும், 65000க்கு மேற்பட்ட வாக்களார்களையும் கொண்ட 99வீதமானவர்கள் தமிழர்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த மாநாகரசபைக்கு சம்பிரதாய அடிப்படையிலும், பழைமைபோற்றும் வகையிலும் தமிழர் ஒருவரே நியமிக்கப்பட்டு பதவிவகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தற்போது ஆணையாளராக கடமையாற்றியவர் பதவியுர்வு பெற்று வேறு இடத்திற்கு செல்லுகின்ற நிலையில் புதிதாக முஸ்லிம் இனத்தினைச்சேர்ந்த ஒருவரை குறித்த பதவிக்காக நியமிப்பதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண ஆளுனர் எடுத்துவருகின்றார். இதுதொடர்பில் எனது ஆட்சேபனைகளை கிழக்கு மாகாண பிரதம செயலாளரிடமும், அமைச்சர் கி.துரைராசிங்கம் அவர்களிடம் தெரிவித்துள்ளேன். முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுவது இனவாதமாக நான் குறிப்பிடவில்லை. ஆனால் சம்பிரதாயபூர்வமாகவும், அதிகமாக தமிழர்களை கொண்ட பிரதேசம் என்றவகையிலும் தமிழர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். அதுபோன்று முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற இடங்களில் முஸ்லிம் இனத்தவரே இவ்வாறான பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும். அதைவிடுத்து சகோதர இனத்தினைச்சேர்ந்த ஒருவரை நியமனம் செய்வதானது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. எனவே கிழக்கு மாகாணசபையில் இருக்கின்ற இரு அமைச்சர்களும் இதுதொடர்பில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தமிழர் ஒருவர் நியமிக்க முடியாத நிலை ஏற்படும்பட்சத்தில் மாகாணத்தில் அமைச்சர்களாக இருப்பது தொடர்பில் பரிசீலிக்க வேண்டி ஏற்படும் எனவும் மேலும் கூறினார்.