மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் கடந்த மே 4ஆம் திகதி பழங்குடியின பெண்கள் இருவரை, மைத்தேயி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் சில நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை மணிப்பூர் பொலிஸார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இது போல் மணிப்பூரில் மே 3-ம் திகதிக்குப் பின் பல கொடூர சம்பவங்கள் நடைபெற்றது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. தலைநகர் இம்பாலில் கடந்த மே 4-ம் திகதி அன்று மற்றொரு கொடூர சம்பவமும் நடைபெற்றது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கார் சுத்தம் செய்யும் கடை ஒன்றில் குகி இனத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் பணியாற்றியுள்ளனர்.
இவர்களில் ஒருவருக்கு வயது 24, அவரது தங்கைக்கு வயது 21. இருவரும் இம்பால் நகரில் மைத்தேயி மக்கள் அதிகம் வசிக்கும் கோன்வுங் மனாக் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது வீட்டுக்கு கடந்த மே 4-ம் திகதி அன்று மைத்தேயி இனத்தவர்கள் கும்பலாக புகுந்து பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவர்களை கொலை செய்துள்ளனர்.