பண்டாரவளையைச் (பதுளை மாவட்டம்) சேர்ந்த வியாபாரிகள் காய்கறிகளை விற்பதற்காக பலாங்கொடை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் அப்போது இரத்தினபுரி மாவட்டம் ஊரடங்கு உத்தரவின் கீழ் இருப்பதென்பது அவர்களுக்குத் தெரியாது. பலாங்கொடைப் பிரதேசம் இரத்தினபுரி மாவட்டத்திலேயே உள்ளது. பண்டாரவளையிலிருந்து ஏறத்தாள 60 கிலோமீற்றர் பிரயாணம் செய்தே பலாங்கொடையை வந்தடைய முடியும்.
“ஊரடங்கு அமுலில் இருப்பதாலும் காய்கறிகளுடன் மீண்டும் பண்டாரவளைக்குச் செல்ல எங்களுக்கு வழியில்லை என்பதாலும், உடனடியாக அவற்றினை மிகவும் குறைந்த விலையில் அந்த இடத்திலேயே விற்பனை செய்ய நாங்கள் தயாரானோம். அவ்வேளையில் அந்த இடத்திற்கு விரைந்து வந்த பலாங்கொடை மேயர் காய்கறிகளின் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தினார்” என்று வியாபாரி ஒருவர் தெரிவித்தார். “பொறுப்புவாய்ந்த மேயர் ஒருவர் இரக்கமற்ற முறையில் செயற்பட்டதென்பது முற்றிலும் நியாயமற்றது” என்றும் மேலும் அந்த வியாபாரி கூறினார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக பல மாவட்டங்களில் ஊரடங்குகள் அமுலில் இருப்பதும், பின்னர் மக்களின் நன்மை கருதி, அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக ஊரடங்குகள் அவ்வப்போது தளர்த்தப்படுவதுமான நிலைமைகள் உள்ளன. இது மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுவேறான காலகட்டங்களில் நிகழ்கின்றன. பதுளை மாவட்டத்தில் ஊரடங்கு இல்லாத வேளையில் காய்கறிகளை எடுத்துவந்த வியாபாரிகளுக்கு, இரத்தினபுரி மாவட்டம் இன்னமும் ஊரடங்கிலிருப்பதென்பது தெரியாமலிருந்திருக்கலாம். இவ்வாறான வியாபாரிகளை மனிதாபிமான ரீதியில் அணுகுவதை விடுத்து, அவர்களின் வாழ்வாதாரமான காய்கறிகளை அழிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து மேயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை வலியுறுத்தியுள்ளனர்.