”தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரான மதுரையில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் மெத்தனமாகவே செயல்படுகிறது. இப்படியே போனால், ஒரு மாதத்துக்கு முன்பு மும்பை இருந்த இடத்துக்கு இன்று சென்னை வந்திருப்பதைப் போல, இன்னும் ஒரு மாதத்தில் சென்னையின் நிலையை மதுரை அடைந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கிறது.
இந்த நிலையில், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி போன்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மதுரையில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளது. கரோனா பரிசோதனையில் தமிழ்நாட்டில் 33-வது இடத்தில் மதுரை உள்ளது” என்று சு.வெங்கடேசன் எம்.பி. காட்டமாக அறிக்கை வெளியிட்டார். அவரது தலைமையில் மதுரையின் மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டமும் நடத்தினார்கள்.
சென்னையில் இருந்து வருவோரைக் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என்ற அரசாணை மதுரையில் மதிக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, தூங்காநகரைத் துயர்மிகு நகராக மாற்றிவிடாதீர்கள் என்று சு.வெங்கடேசன் எச்சரித்ததைத் தொடர்ந்து, மதுரையில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதுவரையில் தினமும் 15-க்குள் மட்டுமே நோய்த் தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில், அவர் கொடுத்த அழுத்தத்துக்குப் பிறகு அந்த எண்ணிக்கை தினமும் 90 முதல் 104 வரை என்று உயர்ந்தது.
கடந்த 5 நாட்களாக பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகி இருப்பது அதிகாரபூர்வமாக வெளிவந்தது. பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. முதல் தொற்று உறுதி செய்யப்பட்ட 92 நாட்களில் மதுரையில் எவ்வளவு நோயாளிகள் இருந்தார்களோ, அதைப்போல இருமடங்கு நோயாளிகள் வெறும் 13 நாளில் கண்டறியப்பட்டார்கள்.
இதற்கிடையே, தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவல் தடுப்புப் பணிக்காக 33 மாவட்டங்களுக்கும் 33 ஐஏஎஸ் அதிகாரிகளை, சிறப்புக் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி மதுரை மாவட்ட சிறப்புக் கண்காணிப்பு அதிகாரியாக போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற அவர், ஒரு வாரமாகியும் மதுரைக்கு வரவில்லை. கரோனா தடுப்புப் பணியில் ஆர்வமும் காட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து இதுகுறித்துத் தமிழகத் தலைமைச் செயலாளரிடம் புகார் செய்தார் வெங்கடேசன்.
கூடவே, ’’சென்னையில் நோய்த்தொற்று அதிகரித்ததும் ஊரடங்கு அறிவித்ததுபோல, தென்மாவட்டங்களில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தனித்த திட்டமிடல் தேவை. அனைத்துவகையான வணிகச் சந்தைகள், விமான நிலையம், ரயில் நிலையம் என்று மதுரையை மையப்படுத்தியே சுற்றியுள்ள மாவட்டங்கள் இயங்குவதால், இவற்றைப் புரிந்துகொண்டு செயலாற்றக்கூடிய செயல்திறன் படைத்த ஒருவரைச் சிறப்பு அதிகாரியாக நியமியுங்கள்’’ என்று அறிக்கையும் வெளியிட்டார் சு.வெங்கடேசன். ’’நிலைமை இன்னும் கை மீறிப்போய்விடவில்லை, ஆனால் வரும் வாரத்தைத் தவறவிட்டால், கடைசி வாய்ப்பையும் தவறவிட்டதாகவே பொருள்’’ என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாகவே மதுரை சிறப்புக் கண்காணிப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் யாதவ் மாற்றப்பட்டிருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே கரோனா தடுப்புப் பணியில் மாவட்ட நிர்வாகம் மோசமாகச் செயல்படுவதாக சு.வெங்கடேசன் மாவட்ட ஆட்சியரிடமே நேருக்கு நேர் புகார் தெரிவித்தது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மேந்திர பிரதாப் யாதவுக்குப் பதில் ராமநாதபுரம் மாவட்டச் சிறப்பு அதிகாரியாக இருக்கும் பி.சந்திரமோகன் ஐஏஎஸ், மதுரை மாவட்டச் சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். தற்போது, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் சந்திரமோகன் ஏற்கெனவே மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரி மாற்றத்துக்கு நீங்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறதே? என்று சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் கேட்டபோது, “எந்த அதிகாரியையும் மாற்ற வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. மதுரையிலும், தென்மாவட்டங்களிலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள் செயல்படுகிறோம். அந்த வகையில் சந்திரமோகன் மதுரை மாவட்ட சிறப்புக் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.
ஆய்வுக்கூட்டத்தை தொலைபேசியிலும், காணொலியிலும் மட்டுமே நடத்துகிற காலமல்ல இது என்பதை சந்திரமோகன் நன்கு அறிவார். எனவே, அவர் மதுரைக்கு விரைந்து வருவார். கரோனா பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தையும் துரிதமாகச் செயல்பட வைப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.