மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான அரச காணியில் அத்துமீறிக் குடியேறியதாகத் தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த 2023.09.22 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குத் தீர்ப்புக்காகத் திங்கட்கிழமை (13) எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறிக் குடியேறியதாகத் தெரிவிக்கப்பட்ட 13 பேரும் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர். மகாவலி அதிகார சபை சார்பாக மன்றுக்கு அரச சட்டத்தரணி டில்கானி டி சில்வா முன்னிலையாகியுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது. தீர்ப்புக்காக 13ஆம் திகதி திங்கட்கிழமை வரையிலும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் எந்த வகையான ஆவணமும் அத்துமீறிக் குடியேறியவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களினால் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படாததால் மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறிக் குடியேறிய குறித்த 13 பேரையும் வெளியேறுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுமாறு கோரி அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் 60வது நாளாகவும் போராட்டம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.