மலையகம் 200 ஆண்டுகள்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் அன்னியச் செலாவணியை ஈட்டிக்கொடுப்பதிலும் முன்னின்று உழைத்த மலையக மக்கள் அரசியல் சூழ்ச்சியால் வெளியேற்றப்பட்ட நிலையில் தமிழகம் வந்த அவர்கள் பொருத்தமற்ற வேலைகளில் பொருத்தமற்ற சீதோஷ்ணநிலை நிலவும் இடங்களில் அமர்த்தப்பட்டனர்.

பெருந்தோட்ட தொழிலாள வர்க்கத்தின் தலைமையின்றி ஈழப்போராட்டம் வெற்றியடைவது சாத்தியமில்லை என்பதைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் க. பத்மநாபா அவர்களை ஆந்திராவிலும் தமிழகத்தில் இராணிப்பேட்டையிலும் வேறு இடங்களிலும் சந்தித்து அணிதிரட்டி, தமிழகத்தின் நிர்வாக அலுவலகமான எழிலகத்தின் சுற்றுப்பகுதியில் உணவு சமைத்து உண்டு உறங்கும் போராட்டத்தை நடத்தி அவர்களை தமிழகம், கேரளம் உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதிகளில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

அந்த போராட்டத்தில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது.தாயகம் திரும்பியோர் மறுவாழ்வுக்கழகம், தாயகம் திரும்பிய மலையக மாணவர் இளைஞர் அணி போன்ற அமைப்புகளை நிறுவி பலருக்கு தொழில்வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.

குமுறும் எரிமலை என்ற பத்திரிகையையும் தாயகம் திரும்பிய மாணவர் இளைஞர் அணியின் சார்பில் தோழர் எம். லோகி தாஸனை (பல்லவன் தாஸ்) ஆசிரியராகக் கொண்டு வெளியிட்டார்.

இலங்கையின் மலையகத்தில் செயற்பட்ட செங்கொடி சங்கம் போன்ற இடதுசாரி தொழிற்சங்கங்களுடனும் தமிழகத்தின் தொழிற்சங்கங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுத்தார்.அவர் இல்லாத நிலையில் மலையகம் 200 விழா இன்று (20.05.2023) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்று அவர் இருந்திருந்தால் பெருமகிழ்ச்சியுடன் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருப்பார். விழா சிறக்க வாழ்த்துகள்.