ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயற்பாடுகளைப் பொறுத்தவரை, கடந்த 19 ஆம் திகதி 1300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது என்ற வகையிலேயே ஒரே நேரத்தில் இதனை ஆரம்பித்தோம். எஞ்சியிருக்கின்ற 8700 வீடுகளையும் இவ்வாறே ஒரே நேரத்தில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏனென்றால் நாம் ஒரு முறைமையின் அடிப்படையில் செயற்பட விரும்புகின்றோம். இந்த 1300 வீட்டுத்திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பூர்த்தி செய்யப்படும்.
மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரு சில அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கூட கைச்சாத்திட்டுள்ளன. தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தேவையில்லை.
சில அரசியல் தலைவர்களின் கூற்றுப்படி, தோட்டங்களில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஒரே பிரச்சினை 1500 ரூபா நாளாந்த சம்பளம் பெற்றுக்கொள்வதாகும். எனது மக்களை அந்தளவு தாழ்த்த நான் விரும்பவில்லை. அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சி அல்லது எந்தக் குழுவின் அரசியல் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் சிறுபான்மைப் பிரிவினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசியல் பிளவுகள் இருக்கக் கூடாது என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும் என்றார்.