முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் நியமிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் எழுத்துமூல எதிர்பை சமர்ப்பிப்பதற்கு திகதி குறிக்கப்பட்டது. இந்த எதிர்ப்புகளை, செப்டெம்பர் 4ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மாவட்ட நீதிபதி சுஜீவ நிசங்க, நேற்று (29) உத்தரவிட்டார். எழுத்துமூல எதிர்பை, ஓஸ்கட் 29ஆம் திகதி (நேற்று) சமர்ப்பிக்குமாறு, உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தமக்குக் கால அவகாசம் வேண்டுமென இரு தரப்பினரும் கோரியதையடுத்தே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்ப்டடது.
2015ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவால், கட்சியின் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய குழுவை முறையாக கூட்டாமல் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று, கே.டீ. அருன பிரியஷாந்த, மத்தேகொட அசங்க நந்தன ஆகியோரால் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவில், சு.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
பிரதிவாதியின் பெயர் சரியாகக் குறிப்பிடப்படவில்லை எனவும் இந்த வழக்கைக் கொண்டு செல்ல முடியாது என்றும் வழக்கைத் தள்ளுபடிசெய்யுமாறும் கோரி, அநுர பிரியதர்ஷன யாப்பாவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியினால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, இருதரப்பினரதும் எழுத்துமூல எதிர்ப்புகளைச் சமர்ப்பிக்குமாறே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றையதினம், மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.