சு.கவின் உடைவைத் தடுக்க பகிரதப் பிரயத்தனம்
சந்திரிகா தொடர்ந்தும் எதிர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முகம் கொடுக்க சுதந்திரக் கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சுதந்திரக் கட்சியில் உள்ள சிலரும் ஐ. ம சு. மு. கூட்டுக் கட்சியிலுள்ள சிலரும் இணைந்து தனியாக கட்சியமைத்து தேர்தலுக்கு முகம் கொடுக்க முயலும் நிலையில் கட்சி உடைவதை தடுப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறு உடன்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஆகியோருக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்தும் கட்சியை உடைய விடாமல் ஒன்றுபட்டு பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 2 மணி நேரத்துக்கு மேல் இந்த சந்திப்பு நீடித்துள்ளது. இதன் போதே ஜனாதிபதி இவ்வாறு உடன்பட்டுள்ளதாக அறிய வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முகம் கொடுத்தாலே வெற்றியீட்ட முடியும் என சுதந்திரக் கட்சியில் ஒரு தரப்பினரும் ஐ. ம. சு. மு. கூட்டுக் கட்சியினரும் கூறி வருகின்றனர்.
ஆனால் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவே தேர்தலுக்கு தலைமை வகித்து செயற்பட வேண்டும் என மற்றொரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தான் தலைமை வகித்து கட்சியை வழிநடத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால் அவர் தலைமையில் போட்டியிட்டால் கட்சி படுதோல்வியடையும் என சுதந்திரக் கட்சி உள்ளூராட்சி சபை முன்னாள் தலைவர்கள் பலரும் கூறியுள்ளனர்.
அரசாங்கத்தில் இணையாத ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐ. ம. சு. மு. வில் இணைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உருமய, இடதுசாரி கட்சிகள், மக்கள் ஐக்கிய முன்னணி என்பன முன்னாள் ஜனாதிபதியை இணைத்து தனியான கட்சியொன்றை ஆரம்பிக்க முயற்சி செய்து வருகின்றன. அவர் இதற்கு உடன்படாவிட்டால் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோதாபய ராஜபக்ஷவின் தலைமையில் புதிய கட்சியை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
இதன் மூலம் கட்சி பிளவுபட்டு அதனால் ஐ. தே. க.வுக்கே நன்மை ஏற்படும் என சு. க. சிரேஷ்ட தலைவர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம். பௌஸி, உள்ளூராட்சி தேர்தல் குறித்தும் கட்சியை பிளவுபடாமல் ஒன்றுபட்டு செயற்படுவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டதாக குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதியை இணைத்துக் கொண்டு எதிர்வரும் தேர்தலுக்கு முகம்கொடுப்பதன் மூலம் கட்சி பிளவுபடுவதை தடுக்க முடியும் என சிரேஷ்ட சு. க. தலைவர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷவை இணைத்து செயற்படுவதற்கு ஜனாதிபதியின் உடன்பாடு இருப்பதாகவும் அமைச்சர் பெளஸி தெரிவித்தார்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இணைத்து செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் கூறின. இதன் மூலம், சிறுபான்மையினரதும் இனவாதத்திற்கு எதிரான தரப்பினரதும் ஆதரவு கிடைக்காது என ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்குவதற்கும் பிரசாரத்திற்கு பொறுப்பாக நியமிப்பதற்கும் சந்திரிகா குமாரதுங்க எதிர்ப்பு வெளியிட்டு வந்தது தெரிந்ததே.