முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னை 19 நிமிடங்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மகளிர்தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர் “நான் பதவி விலகியதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்த சமயம் அவரது 60 ஆவது பிறந்த தினமும் வந்ததால் வாழ்த்துத் தெரிவிப்பதற்காக தொலைபேசியில் அவரைத் தொடர்புகொண்டேன். சுமார் 19 நிமிடங்கள் மஹிந்த என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதுதொடர்பில் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய சுதந்திரக் கட்சியின் செயலாளருமாக இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்திருந்தேன். நான் கட்சியை மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்க தீர்மானித்த பொழுது செயற்குழுவில் இருந்த 61 உறுப்பினர்களில் 57 பேர் வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். 1980 ஆம் ஆண்டில் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவிற்கு நேர்ந்ததை மறந்து விட்டீர்களா என்று எச்சரித்தனர். ராஜபக்சவும் மைத்திரிபால சேனநாயக்கவுமே 17 வருடங்களாக கட்சியை தோல்வியடையச் செய்தவர்கள் எனவும் வலியுறுத்தினர்.
80களில் நேரத்தில் கட்சியைக் காப்பாற்றியது நானும் விஜயகுமாரதுங்க உள்ளிட்டவர்களுமே. சுதந்திரக் கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு, சாவியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒப்படைத்திருந்தார்கள். கட்சியின் சின்னத்தை தமக்கு தரவேண்டும் எனக் கோரி ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவை ஏழு நீதிமன்றங்களுக்கு அழைத்துச் சென்றனர். சுதந்திரக் கட்சியைப் பற்றி மஹிந்தவுக்கு எதுவும் தெரியாது. முதலில் கம்யூனியசக் கட்சியில் இருந்து பின்னர் ஜே.வி.பியுடன் இணைந்து படுகொலைகளைப் புரிந்தார். அதன் பின்னர் மங்கள சமரவீரவே மஹிந்தவை சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக்கொண்டார்.” எனக் குறிப்பிட்டார்.