பாடசாலை ஆரம்பிக்கும் போது தேசிய கீதம் மற்றும் காலை கூட்டம் இடம்பெறும் அப்போது பிந்தி வரும் மாணவர்களை காலைக்கூட்டம் முடியும் வரை நிறுத்தி வைப்பது வழமையானதாகும்.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை (25) காலை பாடசாலை ஆரம்பித்து காலைக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது குறித்த வேட்பாளர் அவரது பிள்ளையை பாடசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அங்கு பிந்தி வந்த மாணவர்களை நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.
இதன் போது பிந்தி சென்ற அவரது பிள்ளை பாடசாலைக்குள் செல்ல வேண்டும் என பாடசாலை வளாகத்தினுள் அத்துமீறி உள் நுழைய முற்பட்ட போது அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவர் தலைவர்களை தகாத வார்த்தை பிரயோகித்து தான் கட்சி ஒன்றின் வேட்பாளர் என தெரிவித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த, உலக்கை றபீக் என அழைக்கப்படும் வேட்பாளருக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் மாவட்ட தேர்தல் உதவி ஆணையர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பிலும் குறித்த பாடசாலை அதிபர் முறைப்பாடு செய்துள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.