ரஷ்யாவில் கரோனா வைரஸால் 303 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் இங்கு கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் 14 நாட்களுக்குக் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். கரோனா அறிகுறி இருப்பவர்கள் வெளியே வந்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டுப் பயணிகள் நாடு கடத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தனிமைப்படுத்தல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. முகத்தைக் கண்டறியும் கேமராக்கள் கொண்டு இவை அமல்படுத்தப்பட்டன. இதை எதிர்த்து போராட்டங்கள், பேரணிகள் நடந்து வந்தாலும், அதை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை.
இதற்காக சுமார் 1 லட்சம் கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 200 பேர் கேமராக்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.
முன்னதாக, கரோனா பாதிப்பைக் கண்காணிக்க உயர்தர மையம் ஒன்றை அமைப்பதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் தெருக்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் 1.7 லட்சம் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.