எண்பதுகளின் பின்னிறுதியில் கிறிஸ்தவ தொழிலாளர் அமைப்புடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தவுடன் தோட்டத் தொழிலாளர் பணியிலிருந்து விடைபெற்று சமூக செயற்பாட்டளராக செயற்பட ஆரம்பித்தார். ஆயினும் செங்கொடி சங்கத்தில் வகித்த இளஞர் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவில்லை. தொடர்ந்து தோழர் ராமையாவுடன் பயணித்தார்.
1975 ஆம் ஆண்டு செங்கொடி சங்கத்திற்கு சென்ற வேளையிலேயே நான் தோழர் மோகனை முதல் முதலாகச் சந்தித்தேன். அன்றிலிருந்து அவர் எம்மை விட்டு பிரியும் வரை நட்பு, தோழமையன்புடன் தொடர்ந்தது. 1977 கலவரத்தின் பின்னர் தோழர் இளஞ்செழியன், ராமையா, நான் உட்பட பலர் இணைந்து ஆரம்பித்த இந்திய வம்சாவளி அமைப்புடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தார். தோழர் ராமையா இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவேளை அவருடன் கம்யூனிஸ் கட்சியில் இணைந்த அவர் கம்யூனிஸ்ட்கட்சியின் இணைந்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளதுடன் இருவருடத்திற்கு முன்னர் நடாந்த உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்டு அட்டன் நகர சபையின் உறுப்பினராகினார். கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தெரிவு செய்யும் அளவிற்கு தன்னை கட்சிக்குள் வளர்த்துக் கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சி பற்றி பல விமர்சனங்களை நான் அவரிடம் முன்வைக்கும் போதல்லாம் முன்வைக்கப்படும் விமர்சனங்களையெல்லாம் ஏற்றுக் கொண்டாலும் கட்சியின் நிலைப்பாடினை ஏற்றுக்கொள்ளும் தன்மையைத் தொடர்ந்து பின்பற்றி வந்தார்.
“என்னதான் இருந்தாலும் கட்சியின் மத்தியத்துவ ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்” என்பார். கட்சி பிழையான நிலைப்பாட்டை எடுத்தாலும் கட்சி எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட வேண்டும் என்பார்.
இடதுசாரி கட்சிகளைச் சார்ந்த எந்தவொருவருடன் நட்பைப் பேணும் தன்மையைக் கொண்ட தோழர் மோகன் எப்போதும் ராமையா மீதும் செங்கொடி சங்கத்தின் மீதும் அதிகளவு பற்று வைத்திருந்தார். அவரை தேடிச் சென்றாலும் எந்தவொரு இடதுசாரி தோழரையும் , கிறிஸ்துவ தொழிலாளார் நிறுவனத்தில் தங்க வாய்ப்பளிப்பார். 1997 ஆம் ஆண்டு முதல் வடகிழக்கின் இடதுசாரி அமைப்புகளான புளோட், ஈரோஸ் மற்றம் ஈபிஆர்எல்எப் அமைப்பினைச் சார்ந்தோர் மலையகத்திற்கு வரும்வேளை அவர்களக்ககு ஆதரவளித்தார்.
1984 ஆம் ஆண்டு முதல் நான் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டவேளை 1985 ஆம் ஆண்டு எனது வெளித்தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு தோழர் இளஞ்செழியனுடன் அட்டன் சென்று நகரசபை மண்டபத்தில் நடந்த அவரது ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் ரவி என்ற பெயரில் உரையாற்றியபோது அவர் என்னைப் பார்த்து நீங்கள் தோழர் முத்து தானே என்றார்.
அப்போது தோழர் இவர் முத்து இல்லை இவர் ரவி இவரது அண்ணன்தான் முத்து என்றார். ஆனால் தோழர் மோகன் விடவில்லை. தோழர் ஒருபோதும் தனக்கு அண்ணன் ஒருவர் இருக்கின்றார் எனக் கூறவே இல்லை என்றார். பின்னர் கூட்டம் முடிந்தப்பின் என்னிடம் வந்து தோழர் நீங்கள் முத்துதானே என்றார் நான் இல்லையென்றேன். சற்று நேரம் யோசித்துவிட்டு இல்லை ஒருமுறை புளோட் சந்ததியார் என்னை சந்தித்து விட்டு மீண்டும் ஒரு முறை சந்திக்க வந்தவேளை வேறு பெயரைச் சொன்னார். பிறகு தான் புலானாய்வுத் துறையினரால் தேடப்படுவதால் பெயரை மாற்றி வைத்துள்ளேன் எனக்கூறினார்.
அதுபோல் உங்களுக்கும் ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கும் அதனால் தான் பெயரை மாற்றிக் கொண்டீர்களோ என நினைத்தேன். சரி முத்து தோழரைக் கண்டால் நான் விசாரித்தாகச் சொல்லவும் என்றார். பிறகு நான் உண்மையைக் கூறிவிட்டேன். அதனைக் கேட்டவுடன் ஏதும் பிரச்சினையிருந்தால் எங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளுங்கள் என்றார். அரசின் ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தவேனை தோழர் எதற்கும் அஞ்சாமல் எனக்கு அடைக்களம் தரம முன்வந்தார். அவரது தோழமையான வேண்டுகோளை இன்று நினைக்கையில் மனம் கணக்கின்றது.
2003 ஆம் ஆண்டு செங்கொடி சங்கம் வீழ்ச்சியை சந்தித்த வேளை என்னை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து செங்கொடி சங்கத்தை கட்டியெழுப்ப உதவமாறு கோரியதுடன் என்னுடன் இணைந்து முன்னாள் செங்கொடிச் சங்க தோழர்களை சந்தித்து கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டார். மலையக மக்கள் சார்பாக யார் ஒருவர் கூட்டத்தை நடாத்தினால் அவ்விடத்தில் மோகனைக் காணலாம். சுயமுயற்சியினால் சிங்களத் தமிழ் மொழிபெயர்பாளராக பரிணமித்த தோழர் மோகன் கியூபா உட்பட முன்னால் கம்யூனிச நாடுகள் நடாத்திய இளஞர் மாநாடுகள் பலவற்றில் கலந்துக் கொண்டுள்ளார்.
இறுதியாக அவருடன் மூன்று மாதங்களுக்கு முன்னரே உரையாடும் வாய்ப்பு கிட்டியது. யாரையும் கடுமையாக பேசாத தோழர் மோகன் மலையகத்தில் நடைபெறும் சமூக நிகழ்வுகளில் வெள்ளைச் சட்டை அணிவதையும் இடதுசாரி கலந்துரையாடலாக இருப்பின் சிகப்பு சட்டை அணிவதை தவறாது பின்பற்றி வந்தார். மலையகத்தில் கம்யூனிஸட் அடையாளத்துடன் வாழ்ந்த தோழர் மோகனின் திடீர் மறைவு பாரிய இழப்பாகும். இன்னுமொரு சிகப்புச் சட்டை தோழனை மலையகம் இழந்து விட்டது. அன்னாரின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாது தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.