மியன்மாரின் ஜனாதிபதியாவதற்கு ஆங் சான் சூகிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனாதிபதி பெயர் பட்டியலில் சூகியின் முன்னாள் சாரதி ஹ்தின் க்யாவ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இதுவரை இருவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி வேட்பாளரை நாடாளுமன்றம் இந்த வாரம் தெரிவு செய்யும். இராணுவத்தின் அரசியமைப்புச் சட்டத்தின்படி, உயர் அரசியல் பொறுப்பு வகிக்க, தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவரது மகன் பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மியன்மார் இராணுவத்தால் பல ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி 2010ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மியன்மாரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி 80 சதவீத வெற்றியைப் பெற்றது.
இந் நிலையில் அவர் ஜனாதிபதியாக முடியாத நிலையில் தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை சூகி தெரிவு செய்தார். இதனையடுத்தே முன்னாள் சாரதி ஹ்தின் க்யாவை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார் சூகி. 69 வயதாகும் ஹ்தின் கியாவ் சூகியின் பாடசாலை கால நண்பர் என சொல்லப்படுகிறது. மேலும் அவரது அறக்கட்டளையை நடத்த உதவி செய்து வருபவர்.