வடக்கில் இருந்து இந்தியாவுக்கு 10 நாட்களுக்கு பயணிகள் கப்பல் சேவையை நடத்துவதற்கு 32 வருடங்களுக்குப் பிறகு, இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள இந்து கோவிலில் இடம்பெறவுள்ள நிகழ்வுக்காக வடக்கில் இருந்து இந்து பக்தர்களை கொண்டு செல்லதற்காக அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளமை தொடர்பில் கருத்து தெரவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
தென்னிந்திய இந்து ஆலயத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை நிகழ்வுளில் கலந்துகொள்ளும் வடக்கு பக்தர்களுக்காக, 2017 ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன் துறையிலிருந்து, தென்னிந்தியாவுக்கு பயணிக்க அனுமதி கோரப்பட்டுள்ளதுடன், பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கப்பல் சேவை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியேற்படும் என சிவசேனா இந்து அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, இதற்கு முன்னர் இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது, 1984ஆம் ஆண்டு இறுதியாக இடம்பெற்றிருந்தது.