இந்த விடயத்தை அப்போது சிறை அதிகாரியாக இருந்த ரூபா வெளிக்கொண்டு வந்ததுடன் சசிகலா மீதும் மற்ற சிறை அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு தனி சமையலறை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டினார்.
மேலும், சிறையில் மற்ற வி.ஐ.பி. கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சூழல் என பலவற்றை அம்பலப்படுத்தினார்.
இதையடுத்து சிறைத்துறைக்குள் நடந்த விவகாரங்களை பொதுவெளியில் வெளிப்படுத்தியதாக டி.ஐ.ஜி. ரூபா சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், ரூபாவின் குற்றசாட்டு குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு, ‘சிறையில் சசிகலா சிறப்பு சலுகைகளை அனுபவித்தது உண்மை’ என 245 பக்க அளவில் அறிக்கை அளித்தது.
அதன் அடிப்படையில் சசிகலா, இளவரசி மற்றும் சிறை அதிகாரிகள், ஊழியர்கள் 6 பேருக்கு எதிராக பெங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வழக்கு நேற்று நீதிபதி லட்சுமி நாராயணபட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் அடுத்த மாதம் 11-ந் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.